கர்ப்பிணித் தாயைக் கொன்ற கணவன் தப்பியோட்டம்
புத்தளத்தில் தம்பதியொன்றுக்கு இடையிலான தகராறு முற்றியதால், தனது கர்ப்பிணி மனைவியைக் கொன்றுவிட்டு கணவனொருவர் அப்பகுதியிலிருந்து தப்பி ஓடியுள்ளார்.
புத்தளம் மாவட்டம், கருவலகஸ்வெவ பிரதேச செயலகத்தின் கும்புக்வெவ கிராம உத்தியோகத்தர் பிரிவில் நேற்று மாலை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
பிரேதப் பரிசோதனை
நேற்று மாலை, கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கணவன் தனது 30 வயதான நான்கரை மாத கர்ப்பிணி மனைவியை கடுமையாகத் தாக்கிக் கொன்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மனைவியைப் படுகொலை செய்த பிறகு, கணவன் அப்பகுதியிலிருந்து தப்பி ஓடியுள்ளார். அவரைத் தேடும் பணியில் சாலியவெவ பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று இரவு சம்பவ இடத்திலான விசாரணை நடத்தப்பட்டது. புத்தளம் பதில் நீதிபதி வசிம் ராஜா மரணம் குறித்த சம்பவ இடத்திலான விசாரணையை மேற்கொண்டார்.
உயிரிழந்த பெண்ணின் பிரேதப் பரிசோதனை புத்தளம் ஆதார மருத்துவமனையில் இன்று நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
