ரஷ்ய படைகளிடமிருந்து மீட்கப்பட்ட 7 இலங்கையர்கள் தொடர்பில் வெளிவரும் தகவல்
உக்ரேனின் கார்கிவ் நகரில் ரஷ்யப் படைகளிடம் இருந்து மீட்கப்பட்ட 7 இலங்கை மாணவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த குறித்த மாணவர்கள், கடந்த ஜனவரி மாதம் உக்ரைனுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
ரஷ்யாவிடம் சிக்கிய இலங்கையர்கள்
கடந்த மார்ச் மாதம் முதல் ரஷ்யப் படைகளின் பிடியில் சிக்கியுள்ள இந்த மாணவர்கள் தொடர்பில் இதுவரை எவரும் முறைப்பாடு செய்யவில்லை என ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட கிராமத்தில் சிக்கியிருந்த 7 இலங்கை மாணவர்கள் உட்பட வெளிநாட்டவர்களை தமது படையினர் மீட்கப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலெஸ்கி நேற்று முன்தினம் தெரிவித்தார்.
வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியானதையடுத்து, துருக்கியிலுள்ள இலங்கைத் தூதரகத்திடம் தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சு தெரிவித்ததாக இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.
மொழி பிரச்சினை
எனினும் மொழிப்பிரச்சினை காரணமாக இது தொடர்பில் குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையர்களின் நலன்களை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை கருத்திற் கொண்டு, வெளிவிவகார அமைச்சு, உக்ரைன் அரசாங்கத்திடம் இந்தச் செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துமாறும், அது தொடர்பான மேலதிக தகவல்களை வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.