ரஷ்ய படைகளிடம் இருந்து மீட்கப்பட்ட இலங்கை மாணவர்கள் - வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்
ரஷ்ய படைகளிடம் இருந்து மீட்கப்பட்ட இலங்கை மாணவர்கள் தொடர்பில் துருக்கியிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
உக்ரைனின் காக்கிவ் பகுதியில் ரஷ்யப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 07 இலங்கை மாணவர்கள் மீட்கப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
மாணவர்கள் கடந்த மார்ச் மாதம் முதல் ரஷ்ய இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அந்த மாணவர்கள் தொடர்பில் துருக்கியிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சித்திரவதை கூடங்கள் கண்டுபிடிப்பு
அதன்படி, துருக்கி தூதரக அதிகாரிகள் உக்ரைன் அதிகாரிகளுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மாணவர்கள் உக்ரைனில் உள்ள குபியன்ஸ்க் மருத்துவக் கல்லூரியில் படித்து வருவதாகவும் உக்ரைன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமீபத்தில், ரஷ்யப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் காகிவ் பகுதியை மீண்டும் கைப்பற்றுவதில் உக்ரைன் பாதுகாப்புப் படைகள் வெற்றி பெற்றன. அந்த பகுதியில் ரஷ்ய படைகளால் நடத்தப்படும் சுமார் 10 சித்திரவதை கூடங்களை உக்ரைன் ராணுவம் கண்டுபிடித்துள்ளது.
அந்த சித்திரவதை மையங்களில் பல வெளிநாட்டு பிரஜைகள் அடைக்கப்பட்டிருப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.