ரஷ்யாவிற்கும் கொழும்புக்கும் இடையில் மீள ஆரம்பிக்கப்படும் விமானம் சேவை
2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் நடுப்பகுதியில் மொஸ்கோவிற்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவைகள் மீள ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன ரஷ்யாவின் ரியா நோவொஸ்டிக்கு தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர், ரஷ்ய விமான நிறுவனமான ஏரோஃப்ளோட் இலங்கையின் நீதிமன்ற நடவடிக்கைக்கு அமைய தடுக்கப்பட்டமையை அடுத்து இலங்கைக்கான வணிக விமானங்களை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
எரிபொருள் நெருக்கடி
எரிபொருள் நெருக்கடி தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், நாட்டிற்குள் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைப்பது சாத்தியம் என்றும், பொருளாதாரம் மற்றும் நாணயம் என ஒவ்வொரு நெருக்கடியிலிருந்தும் இலங்கை தற்போது மீண்டு வருவதாகவும், இந்த விடயத்தில் ரஷ்யாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளைக் கொள்வனவு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு கடன் தேவை
ரஷ்ய எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு இலங்கைக்கு கடன் தேவை என சுட்டிக்காட்டிய அமைச்சர், ரஷ்ய அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிற்குள் வீதிகள் மற்றும் புகையிரத பாதைகளை நிர்மாணிப்பதில் ரஷ்யா கணிசமான பங்களிப்பை வழங்க முடியும் என அமைச்சர் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசியல் போராட்டங்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், ரஷ்ய சுற்றுலாப் பயணிகள்
இலங்கைக்கு வருவது 100% பாதுகாப்பானது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.