யாழ்ப்பாணம் சென்று வர அநுர கோடிக்கணக்கில் செலவு செய்தாரா..! வெளியான தகவல்
யாழ்ப்பாணம் - கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் தைப்பொங்கலுக்கு மறுநாள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொண்ட ஒரு நிகழ்வுக்கான செலவாக ஒரு கோடியே 10 இலட்சத்து 79 ஆயிரத்து 75 ரூபாய் 50 சதம் (11,079,075.50)என செலவு காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, தை மாதம் பொங்கல் தினத்தில் வட மாகாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மன்னாரில் காற்றாலை மின்சாரத்தை ஆரம்பித்து வைத்த நிலையில், அன்று மாலை வேலனையில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்விலும் கலந்து கொண்டார்.
தைப் பொங்கல் நிகழ்வுகள்
இதனைத் தொடர்ந்து, அன்றே மானிப்பாய் மருதடி ஆலயத்தில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்விலும் கலந்து கொண்டிருந்தார். மறுநாள் யாழ். கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் "முழு நாடுமே ஒன்றாய்" தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலை திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

குறித்த நிகழ்வுக்கான நிதியை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பொறுப்பெடுத்த நிலையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் இணைந்து பெரும் எடுப்பில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
வரவு- செலவு விவரங்கள்
இந்த நிகழ்வுக்காக மண்டப ஒழுங்கமைப்பு சுமார் 52 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாவும் சிற்றுண்டி உபசரணைக்காக சுமார் சுமார் 31 இலட்சத்து 13 ஆயிரம் ரூபாவும் செலவு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்வில் பங்கு பற்றிய பொதுமக்களை ஏற்றி இறக்குவதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 23 இலட்சத்து 43 ஆயிரம் ரூபாவும் நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட பதாதைகளுக்காக சுமார் 51 ஆயிரத்து 700 ரூபாவாக செலவு காட்டப்பட்டுள்ளது.

வரவேற்பு செலவினமாக 23 ஆயிரத்து 375 ரூபாவும் , குடிநீர் மற்றும் மலசல கூடத்திற்காக சுமார் 36 ஆயிரம் ரூபாவும் , முன்னாயத்த வேலைகள் மறுசீரமைப்புக்காக சுமார் 1 இலட்சத்து 18ஆயிரம் ரூபாவாகவும் ஏனைய செலவுகளுக்காக சுமார் 1 இலட்சத்து 54 ஆயிரம் ரூபாவாகவும் செலவு காட்டப்பட்டுள்ளது.
ஆக மொத்தத்தில் யாழில் தைப்பொங்கல் மறுநாள் இடம்பெற்ற ஒரு நிகழ்வுக்கு மாத்திரம் இவ்வாறு பாரிய ஒரு தொகை செலவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.