நாட்டின் சிறைகளையே நிர்வகிக்க முடியாத அரசால் ஒட்டுமொத்த நாட்டை எவ்வாறு நிர்வகிக்க முடியும் - சுஜீவ சேனசிங்க எம்.பி. கேள்வி
தற்போதைய அரசு முழு நாட்டை நிர்வகிப்பதற்கு முன்னர், குறைந்தது நாட்டின் சிறைச்சாலைகளையாவது சரியாக நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(7) வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரசின் மறைமுகச் சதித்திட்டம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"சிறைக்குள் இருக்கும் கைதிகளையோ அல்லது சிறைச்சாலை அமைப்பைக் கூட முறையாக நிர்வாகிக்க முடியாத தற்போதைய அரசால், ஒட்டுமொத்த நாட்டையும் அதன் மக்களையும் எவ்வாறு பாதுகாத்துச் சிறப்பாக ஆட்சி செய்ய முடியும் என்பதை மக்கள் இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும்.

சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இத்தகைய வன்முறைகளும் மோதல்களும் இடம்பெறுவது வெறும் நிர்வாகத் திறமையின்மையா அல்லது இதன் பின்னணியில் அரசின் மறைமுகச் சதித்திட்டம் எதுவும் இருக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.
நாட்டில் நிலையற்ற சூழலை உருவாக்கி, அதைக் காரணம் காட்டி அவசரகாலச் சட்டத்தை நீட்டிப்பதற்கும், பொதுமக்கள் மத்தியில் பயத்தைத் தூண்டுவதற்கும் அரசே இவ்வாறான சூழல்களைப் பயன்படுத்துகின்றதா என்ற கோணத்திலும் கேள்விகள் எழுகின்றன.
சட்ட ஒழுங்கு மீறல்கள்
சிறைச்சாலைகளில் இத்தனை சட்ட ஒழுங்கு மீறல்களும் அசம்பாவிதங்களும் நடந்தேறிய பின்னரும், அதற்குப் பொறுப்பான துறைசார் அமைச்சர் தனது பதவியை விலகல் செய்யாமல் தொடர்ந்து நீடிப்பது பெரும் கேள்வியை எழுப்புகின்றது.
அமைச்சர் பதவி விலகாமல் இருப்பதன் மூலம், சிறைச்சாலைக்குள் நடக்கும் இத்தகைய மோதல்கள் அவருடைய முழு அறிவோடும் விருப்பத்தோடும் தான் நடக்கின்றனவோ என்ற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.

நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்களோ அல்லது வழக்கு விசாரணை முடிவடையாமல் பிணை மறுக்கப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களோ, சிறை வளாகத்துக்குள்ளேயே மரணமடையும் அல்லது கொல்லப்படும் ஆபத்தான சூழல் நிலவுவது நாட்டின் சட்டத்தின் ஆட்சிக்கும் நீதித்துறைக்கும் விழுந்த பேரிடியாகும்.
தவறு செய்தவர்களுக்குச் சட்டப்படி நீதிமன்றமே தண்டனை வழங்க வேண்டுமே தவிர, சிறைச்சாலைகளுக்குள்ளேயே அவர்களுக்கு மறைமுக மரண தண்டனை கிடைக்கும் நிலைமை உருவாகக் கூடாது. இந்த விவகாரத்தில் அரசு தனது உண்மையான நிலையை நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.