பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை கற்பனை உலகில் வாழ வைக்கும் அநுர அரசு!
அரசும் ஜனாதிபதியும் மக்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, அவர்களைத் தொடர்ந்தும் கற்பனை உலகில் வாழ வைப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார கடுமையாகச் சாடியுள்ளார்.
அரசு அதிகாரத்துக்கு வரும்போது நாட்டு மக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளை வழங்கிய போதிலும், இன்று செல்லும் இடங்களிலெல்லாம் ஜனாதிபதி புதிய கதைகளைக் கூறி மக்களை மேலும் ஏமாற்றி வருகின்றார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
வரி அதிகரிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், வரிகள் உயர்த்தப்படவில்லை என ஜனாதிபதி கூறினாலும், இன்று அத்தியாவசியப் பொருள்கள், கல்வி மற்றும் சுகாதார உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மக்கள் எதிர்கொள்ளும் துயரங்களைக் கண்டு அரசு காதுகேளாத யானையைப் போலச் செயல்படுகின்றது. மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதாகக் கூறியவர்கள், இந்த ஆண்டில் மட்டும் கட்டணத்தை இருமுறை உயர்த்தியுள்ளதுடன், மீண்டும் 2.8 மடங்கினால் உயர்த்த முன்மொழிந்துள்ளனர்.

எதிர்த்தரப்பினர் தாக்கும் அளவை வைத்தே தங்கள் வெற்றியை அளவிட முடியும் என அமைச்சர் வசந்த சமரசிங்க கூறுகின்றார்.
அமெரிக்கத் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் அடைந்த வெற்றியைப் பாடமாகக் கொண்டு, அரசுக்குத் தைரியமிருந்தால் உடனடியாகத் தேர்தலை நடத்திக் காட்டட்டும்.மக்கள் எவ்வளவு சௌகரியமாக இருக்கிறார்கள் என்பதைத் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள்.
சுற்றுலா அபிவிருத்திப் பணி
அரசுக்கு எதிராக உருவெடுத்து வரும் மக்கள் எழுச்சியை அடக்குவதற்காகவே 'அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம்' மற்றும் 'ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம்' ஆகியவற்றைக் கொண்டுவந்து ஜனநாயகத்தைக் குழப்ப முயற்சிக்கின்றனர்.
இந்தப் புதிய சட்டங்களின் கீழ், உரிமைகளுக்காகப் போராடுபவர்களைப் பயங்கரவாதிகள் என முத்திரையிட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தாமல் தடுத்து வைக்கும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் நிதியிலிருந்து பெருந்தொகைப் பணம் அரசினதும் ஜனாதிபதியினதும் பிம்பத்தைக் கட்டியெழுப்பத் தனிப்பட்ட ஊடகம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தங்களின் திறமையின்மையை மூடிமறைக்கவே அரசு இந்த அடக்குமுறைகளைக் கையிலெடுக்கின்றது. ஆட்சியை நடத்த முடியாவிட்டால், அதைத் தகுதியானவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.