ரைசிக்கு இருந்த மற்றுமொரு வாய்ப்பு : விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதியின் அறியப்படாத பக்கங்கள்
ஈரான் நாட்டின் எட்டாவது ஜனாதிபதியான இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) பயணித்த உலங்கு வானூர்தி, விபத்தில் சிக்கிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது.
இவரது வரலாற்றுப் பின்னணி் குறித்து நோக்குகையில் “63 வயதான இப்ராஹிம் ரைசி கடந்த 2021இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பதிவான 28.9 மில்லியன் வாக்குகளில் 62 சதவீத வாக்குகளை பெற்றவர்.
இதற்கு முன்பாக ஈரானின் நீதித்துறையில் முக்கிய பங்காற்றிய தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.
அரசு தரப்பு வழக்கறிஞர்
எனினும், 2017இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். ஈரான் நாட்டின் மூத்த தலைவர் பொறுப்பை கவனித்து வரும் அயத்துல்லா அலி காமெனிக்கு அடுத்ததாக அந்த பொறுப்பை இப்ராஹிம் கவனிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையிலேயே அவர் உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்தார்.
மேலும், ரைசி நீதித்துறை சார்ந்த செயல்பாடுகள் மற்றும் மத ரீதியிலான பற்று காரணமாக பரவலாக அறியப்பட்ட ஒருவர்.
தனது 15ஆவது வயதில் ஈரான் நாட்டின் ‘Qom’ மத பாடசாலையில் பயின்றார். அங்கு இஸ்லாமிய அறிஞர்கள் பலரிடம் பாடம் கற்று, அதில் தேர்ச்சி பெற்றார்.
பின்னர் 1981இல் அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டதிலிருந்து தொடங்கிய அவரது நீதித்துறை பயணம் நாட்டின் தலைமை நீதிபதி வரை தொடர்ந்தது.
1983இல் ஜமீலி அலமோல்ஹோதாவை திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
மனித உரிமை அமைப்புகள்
இந்நிலையில், 1988இல் உருவாக்கப்பட்ட 'மரணக் குழு' என்று அழைக்கப்படும் புலனாய்வு நீதிமன்றங்களில் ரைசி சேர்ந்தார்.
ஏற்கனவே அரசியல் நடவடிக்கைகளுக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளை இந்த நீதிமன்றங்கள் 'மீண்டும் விசாரணை' செய்தன.
இந்த அரசியல் கைதிகளில் பெரும்பாலானோர் ஈரானில் உள்ள இடதுசாரி உறுப்பினர்களாக இருந்தனர்.
குறித்த புலனாய்வு நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதிகளின் எண்ணிக்கையில் சுமார் 5,000 ஆண்களும் பெண்களும் அடங்குவர் என்று மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.
இதன்காரணமாக அமெரிக்கா போன்ற நாடுகள் இவருக்கு எதிராக திரும்பின.
மக்களின் அதிருப்தியை பெற்ற ஜனாதிபதி
மறைந்த ஈரான் மதத் தலைவர் கோமேனி மற்றும் தற்போதைய மதத் தலைவர் காமெனி ஆகியோருடன் நெருக்கமான தொடர்பில் இருந்துடன் அரசு, இராணுவம் மற்றும் சட்டமன்றம் ஆகியவற்றுடனும் நல்ல உறவை கொண்டிருந்தார்.
மேலும், ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஆட்சியில் ஈரான் நாட்டு மக்கள் பரவலாக போராட்டத்தில் ஈடுபட்டதுடன் அவரது ஆட்சி மக்களின் அதிருப்தியை பெற்றிருந்தது.
குறிப்பாக கடந்த 2022ஆம் ஆண்டின் செப்டம்பரில் மாஷா அமினி என்ற 22 வயது பெண் முறையாக ஹிஜாப் அணியாத காரணத்துக்காக கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் பொலிஸ் காவலில் இருந்த போது உயிரிழந்ததன் காரணமாக அந்த நாட்டில் மிகப் பெரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்காரணமாக வீதிகளில் அந்த நாட்டுப் பெண்கள் தங்களது ஹிஜாப்புக்கு தீயிட்டனர்.
பல மாத காலம் நீடித்த அந்தப் போராட்டத்தை அரசு தனது அதிகாரத்தின் மூலம் கட்டுக்குள் கொண்டு வந்தது.
அணுகுண்டு தயாரிப்பு
இதேவேளை, இஸ்ரேலும் ஈரானும் 1979 வரை நட்பு நாடுகளாக இருந்தன. எனினும், அதே ஆண்டில் ஈரானில் இஸ்லாமியப் புரட்சி ஏற்பட்டு, சித்தாந்த மட்டத்தில் இஸ்ரேலை கடுமையாக எதிர்க்கும் அரசு அந்நாட்டில் ஆட்சிக்கு வந்தது.
இஸ்ரேல் ஒரு 'புற்றுநோய் கட்டி' என்றும், அது சந்தேகத்திற்கிடமின்றி 'வேரோடு பிடுங்கி அழிக்கப்படும்' என்றும் ஈரானின் முன்னாள் தலைவர் அயத்துல்லா அலி காமெனி கூறி வந்தார்.
இந்நிலையில், காசா போருக்குப் பின் இரு நாடுகளுக்கும் இடையிலான பகை மேலும் அதிகரித்தது. கடந்த ஏப்ரலில் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகத்தை இஸ்ரேல் தாக்கியது.
இந்த கட்டத்தில் இஸ்ரேல் உடனான மோதல் மீண்டும் வெடித்த போது அணுகுண்டு தயாரிப்பதை தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என ஈரான் தெரிவித்தது.
இதற்கிடையில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்குமான தாக்குதல்கள் தீவிரமடைந்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், ரைசி இரண்டாவது முறையாக மீண்டும் ஜனாதிபதியாவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் கிழக்கு அஜர்பைஜானின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள வர்சகான் பகுதியின் உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்துள்ளார்.
You may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |