ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு! மீட்கப்பட்ட உடல்கள்
புதிய இணைப்பு
ஈரான் உலங்கு வானூர்தி விபத்தில் பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோலாஹியன் ஆகியோர் உயிரிழந்தனர்.
கடினமான வானிலையிலும் ஒரு மணி நேரம் தேடுதலுக்குப் பிறகு மீட்புப் படையினர் விபத்து நடந்த இடத்தைக் கண்டுபிடித்து உடல்களை மீட்டுள்ளனர்.
New Update - 12:46
எட்டாம் இணைப்பு
ஈரானின் எட்டாவது ஜனாதிபதியான இப்ராஹிம் ரைசி, கிழக்கு அஜர்பைஜானின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள வர்சகான் பகுதியில் உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகமான INRA உறுதிப்படுத்தியுள்ளது.
''ஈரானின் எட்டாவது ஜனாதிபதியான இப்ராஹிம் ரைசி, கிழக்கு அஜர்பைஜானின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள வர்சகான் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அவர் மற்றும் அவருடன் பயணித்த அரச உயர் அதிகாரிகள் சென்ற ஹெலிகொப்டர் விபத்தில் வீரமரணமடைந்துள்ளார்" என INRA அறிக்கை வெளியிட்டுள்ளது.
சளைக்க முடியாத மற்றும் கடின உழைப்பாளி ஜனாதிபதி தனது தேசத்திற்கு சேவை செய்யும் பாதையில் இறுதி தியாகத்தை செய்துள்ளார் என கூறப்பட்டுள்ளது.
Update - 11:05
ஏழாம் இணைப்பு
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு ஊடகமான MEHR இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விபத்திற்குள்ளான உலங்கு வானூர்தியில் பயணித்த ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் ஆகியோர் வீரமரணம் அடைந்துள்ளதாக அந்த செய்தி கூறுகின்றது.
மேலும், அவர்களுடன் பயணித்த ஏனைய ஐந்து பேரும் வீரமரணம் அடைந்ததாக குறித்த செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
எனினும் ஈரானிய அரச ஊடகமான ஐஆர்என்ஏ இன்னும் மரணச் செய்தியை அறிவிக்கவில்லை.
Update - 10:05
ஆறாம் இணைப்பு
ஈரானிய ஜனாதிபதி உட்பட்டவர்களை ஏற்றிச் சென்ற உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளாகியுள்ளநிலையில், ஈரானின் ஜனாதிபதியும் வெளியுறவு அமைச்சரும் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.
எனினும் அவர்களின் மரணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
ஈரானிய செஞ்சிலுவை சங்கம் வெளியிட்ட புகைப்படத்தின்படி,செங்குத்தான, மரங்கள் நிறைந்த மலைப்பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளது. அந்த இடத்தில் உலங்கு வானூர்தி நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் சிறிய துண்டாக எஞ்சியிருக்கிறது.
ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், பெயர் குறிப்பிட விரும்பாத ஈரானிய அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி, பயணிகள் அனைவரும் இறந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Update - 09:55
ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோலாஹியன் உட்பட்டவர்கள் பயணித்த உலங்கு வானூர்தியை கண்டுபிடித்ததாக மீட்பு பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஆனால் ரைசி உட்பட அதில் பயணித்த எவரும் உயிருடன் இருக்க சாத்தியமில்லை என்று ஈரானிய செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளது.
எனவே, அந்த உலங்கு வானூர்தியில் பயணித்த ஜனாதிபதி ரைசி உட்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
Update - 09:07
ஐந்தாம் இணைப்பு
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளான இடத்தை தேடும் துருக்கிய ஆளில்லா விமானம், நாட்டின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியில், உலங்கு வானூர்தியின் உடைவுகளாக இருக்கலாம் என்று நம்பப்படும் வெப்ப மூலத்தை அடையாளம் கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் உலங்கு வானூர்தியில் பயணித்தவர்களின் நிலை இன்னும் தெரியவில்லை. குறித்த எரியும் இடம் கண்டறியப்பட்டு, தவில் எனப்படும் அந்த பகுதிக்கு மீட்புப் படைகள் அனுப்பப்பட்டு வருவதாக அந்நாட்டின் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
மேலும், துருக்கிய ஆளில்லா விமானம் வெப்ப மூலத்தை அடையாளம் கண்டு அதன் ஒருங்கிணைப்புகளை ஈரானிய அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டது என்று துருக்கிய செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
நான்காம் இணைப்பு
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹி ஆகியோர் பயணித்த உலங்கு வானூர்தி நேற்று ஞாயிற்றுக்கிழமை நாட்டின் வடக்கு பகுதியில் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பல மணிநேர தேடுதலுக்குப் பிறகு, விபத்து நடந்த இடத்தைக் கண்டுபிடித்து, அங்கு மீட்பு குழுக்களை அனுப்பியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தொலைதூர, மலைகள் நிறைந்த கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அடர்ந்த பனிமூட்டம் தேடுதலை கடினமாக்கியுள்ளதாக ஈரானிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மூன்றாம் இணைப்பு
அமெரிக்கா தயாரித்த பெல் 212 உலங்கு வானூர்தி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அவரது சகாக்கள் பயணம் செய்ததை படங்கள் மற்றும் வீடியோக்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரான் ஜனாதிபதி பயணித்த உலங்கு வானூர்தியானது ஒரு பைலட் மற்றும் பதினான்கு பயணிகளுடன் 15 இருக்கைகள் கொண்ட ஒரு நடுத்தர அளவிலானதாகும்.
معاون اجرایی رئیسجمهور: میزان سختی حادثه #بالگرد حامل #رئیسجمهور بالا نبوده است#رئیسیhttps://t.co/p5PfDI1SDl pic.twitter.com/Q8zhFBbJXB
— خبرگزاری ایسنا (@isna_farsi) May 19, 2024
இந்நிலையில், ரைசியின் உலங்கு வானூர்தியில் விமானக் குழுவினர் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட எத்தனை பேர் உள்ளனர் என்பது தொடர்பான தகவல் வெளியாகவில்லை.
மேலும், காணாமல் போன உலங்கு வானூர்தியைத் தேடுவதற்கும், சம்பவத்திற்கான காரணங்களை விசாரணை மேற்கொள்வதற்கும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க ரஷ்யா தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாம் இணைப்பு
ஈரானிய (Iran) ஜனாதிபதி பயணித்த உலங்கு வானூர்தி விபத்திற்குள்ளானதினையடுத்து ஈரானின் அரச தொலைக்காட்சி தனது வழமையான நிகழ்ச்சிகளை நிறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்காக பிரார்த்தனைகள் இடம்பெற்றுவருவதினையும், ஈரானிய ஜனாதிபதியின் உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதான கூறப்படும் இடத்தில் தேடுதல் நடத்தும் மீட்புக் குழுவினரின் நடவடிக்கைகளையும் நேரடியாக ஒளிபரப்பி வருகின்றது.
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அவரது வெளியுறவு அமைச்சர் ஆகியோர் பயணித்த உலங்கு வானூர்தி, அஸர்பைஜான் எல்லைக்கு சென்று திரும்பும் வழியில் கடும் பனிமூட்டம் நிறைந்த மலைப்பகுதியை கடக்கும்போது விபத்துக்குள்ளானதாக ஈரான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தைத் தொடர்ந்து ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோலாஹியன் ஆகியோரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
முதலாம் இணைப்பு
ஈரானிய (Iran) ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) பயணித்த உலங்கு வானூர்தி இன்று கடினமான முறையில் தரையிறங்கியதாக அந்நாட்டு அரச ஊடகம் உடனடியாக விபரிக்காமல் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானின் கிழக்கு அஸர்பைஜான் மாகாணத்தில் ரைசி பயணம் செய்து கொண்டிருந்தார்.
அஸர்பைஜான் தேசத்தின் எல்லையில் உள்ள ஜோல்ஃபா நகருக்கு அருகில் இந்த சம்பவம் நடந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
ரைசியின் உடல்நிலை
இதன்போது, ரைசியுடன் ஈரானின் வெளியுறவு மந்திரி ஹொசைன் அமிரப்டோலாஹியன், ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மற்றும் பிற அதிகாரிகள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
அந்நாட்டு உள்ளூர் அரசாங்க அதிகாரி ஒருவர் சம்பவத்தை விபரிக்க "விபத்து" என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளதுடன் அரச ஊடகம், ரைசியின் உடல்நிலை குறித்து எந்த தகவலையும் வழங்கவில்லை.
இந்நிலையில், மீட்புக்குழுவினர் அந்த இடத்தை அடைய முயற்சிப்பதாக தெரிவித்துள்ள போதும் மோசமான வானிலையால், அந்த முயற்சி பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |