வெளிநாடொன்றில் திடீரென விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தி : 5 பேர் பலி
நேபாளம், காத்மாண்டுவில் இருந்து ரசுவா நோக்கி சென்று கொண்டிருந்த உலங்கு வானூர்தி(Helicopter) திடீரென கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏர் பைனஸ்டி என்கிற உலங்கு வானூர்தியே இன்று(07) பிற்பகல் நுவாகோட்டின் ஷிவ்புரி பகுதியில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
மீட்புக் குழு
குறித்த உலங்கு வானூர்தி விழுந்து நொறுங்கி ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பில் வெளியான அறிக்கையின்படி, உலங்கு வானூர்தி காத்மாண்டுவில் இருந்து ரசுவா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, நுவாகோட் மாவட்டத்தில் உள்ள சூர்யா சவுர்-7 என்ற மலையில் மோதியுள்ளது.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், அதிகாரிகள் மீட்புக் குழுவை சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உலங்கு வானூர்தி காத்மாண்டுவில் இருந்து பிற்பகல் 1:54 மணிக்கு புறப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சூர்யா சவுரை அடைந்த பிறகு, உலங்கு வானூர்தி அதிகாரிகளுடனான தொடர்பை இழந்தது. உலங்கு வானூர்தி புறப்பட்ட மூன்று நிமிடங்களில் தொடர்பை இழந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |