மட்டக்களப்பில் 4 மாதங்களுக்குப் பின்னர் பெய்த கனமழை
கடந்த 4 மாதங்களுக்குப் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் நேற்று(02.08.2026) இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது.
நேற்றைய தினம் 47.8 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளதாக வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடும் மழை
இதனையடுத்து மட்டக்களப்பில் 47.8 மில்லி மீற்றரும், உறுகாமத்தில் 71.0 மில்லி மீற்றரும், நவகிரி பிரதேசத்தில் 62.0 மில்லி மீற்றரும், உன்னிச்சையில் 50.8 மில்லி மீற்றருயும், தும்பங்கேணியில் 40.0 மில்லி மீற்றரும், பாசிக்குடாவில் 14.5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
குறைந்த மழைவீழ்ச்சியாக கட்டுமுறிவு பிரதேசத்தில் 3.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், வாகனேரியில் 7.2 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை மழை பெய்யத் துவங்கிய அன்று மாலை 5 மணிவரை மட்டக்களப்பில் 37.2 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சுமார் 2 மணித்தியாலங்கள் பெய்த மழையின் காரணமாக மட்டக்களப்பில் உணரப்பட்ட உஷ்ணம் தணிந்துள்ளது. அத்துடன் கிணறுகள், குளங்கள், ஆறுகள், வாவிகள் மற்றும் ஏனைய நீர் நிலைகளிலும் ஓரளவுக்கு நீர் தேங்கியுள்ளது.
வெப்பமான காலநிலை
இதுவரை நாட்களும் மட்டக்களப்பில் நிலவிய வெப்பமான காலநிலையால் மக்களின் நடமாட்டங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தன.

கட்டிட நிருமாணத் தொழில் செய்வோர், திறந்த வெளிகளில் தொழில்களில் ஈடுபடுவோர், விவசாயிகள், கடற்றொழிலாளர்கள், மைதான விளையாட்டில் ஈடுபடுவோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பலமாக வீசிய வெப்பக் காற்று குப்பை மேடுகளைப் புரட்டிப் போட்டதோடு விவசாயப் பயிர்கள், மரங்களின் இலைகள் மற்றும் கிளைகளையும் பெயர்த்துள்ளது.