வொஷிங்டன் காட்டுத்தீ: 60,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்
அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில் உள்ள ஸ்போக்கேன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காட்டுத்தீ தீவிரமாகப் பரவி வருகிறது.
இதன்காரணமாக இதுவரை 60,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வொஷிங்டன் காட்டுத்தீ
மேலும் 600-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன.

வொஷிங்டன் மாநிலம் முழுவதும் சுமார் 1,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தீ பரவியுள்ள நிலையில், ஸ்போக்கேன் பகுதியில் மட்டுமே 21 சதுர கிலோமீட்டர் பரப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில மற்றும் உள்ளூர் நிறுவனங்கள் தீவிரமாகப் போராடி வருகின்றன.
600 கட்டிடங்கள் சேதம்
இருப்பினும் சில இடங்களில் தீ இன்னும் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை. இதுவரை உயிரிழப்போ அல்லது காயங்களோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், வரும் நாட்களில் வறண்ட காலநிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் ஆபத்து இன்னும் குறையவில்லை என்று செனட்டர் மரியா கேன்ட்வெல் எச்சரித்துள்ளார்.

காட்டுத்தீ ஏற்பட்டதற்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதேபோல், இடாஹோ, ஓரிகான் மற்றும் உடா ஆகிய பிற மாநிலங்களிலும் காட்டுத்தீ வேகமாகப் பரவி, பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.