பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிரான தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்
அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள 'அரசின் பாதுகாப்புக்கான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு' (Protection of the State from Terrorism Bill) எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள 25 மனுக்களை உயர் நீதிமன்றம் பரிசீலிக்க தொடங்கியுள்ளது.
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, நீதியரசர்கள் அச்சல வெங்கப்பலி மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
25 மனுக்கள் தாக்கல்
25 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்கள் சபாநாயகர் அலுவலகத்திற்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் நெரின் புள்ளே நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், சட்டமா அதிபரின் ஒப்புதல் இன்றி சந்தேகநபர்களை பிணையில் அனுமதிக்கும் நீதிவான்களின் அதிகாரத்தைக் குறைப்பதன் மூலம், இந்தச் சட்டமூலம் நீதித்துறை அதிகாரத்தைப் பலவீனப்படுத்துகிறது என்று வாதிட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவு இன்றியே நபர்களைத் தடுப்புக் காவலில் வைக்க இந்த சரத்துகள் வழிவகுக்கும் ஜனாதிபதிக்கு மிதமிஞ்சிய அதிகாரங்களை வழங்குவது அரசியலமைப்பின் 3 மற்றும் 4 ஆம் பிரிவுகளை மீறுவதாக அமையும்.
பொலிஸாருக்கு அப்பால் முப்படையினர் மற்றும் கடலோர பொலிஸ் படையினருக்கு கைது செய்யும் அதிகாரத்தை வழங்குவது அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கும்.
சட்டமூலத்தின் சர்ச்சைக்குரிய சரத்துக்கள்
எனவே, இந்த சட்டமூலத்தின் சர்ச்சைக்குரிய சரத்துக்கள் நிறைவேற்றப்பட வேண்டுமாயின், நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை மற்றும் பொதுஜன வாக்கெடுப்பு அவசியம் எனத் தீர்மானிக்குமாறு அவர் கோரியுள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, ஜி.எல். பீரிஸ் சார்பாக முன்வைத்த தமது வாதத்தில், தேசிய பாதுகாப்பு முக்கியமானது என்றாலும், அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் அப்பாவி மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சட்டமூலத்தின் கீழ் ஒருவரை ஒரு வருடம் தடுப்புக்காவலில் வைத்து, பின்னர் மேலும் ஒரு வருடம் விளக்கமறியலில் வைக்க முடியும் என்பது பிணைச் சட்டத்திற்கு முரணானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்ற பெயரில் கூட்டங்கள் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்புகளைத் தடை செய்யும் அதிகாரம் நிறைவேற்றுத்துறைக்கு வழங்கப்படக் கூடாது. அந்த அதிகாரம் நீதிவான்களிடமே இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மக்களின் கருத்து சுதந்திரம்
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், மனுதாரர்கள் சார்பான தமது வாதத்தில், இந்த சட்டமூலமானது ஏற்கனவே நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) நீட்சியே தவிர வேறில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தனிமனித சுதந்திரம் மற்றும் நீதித்துறை அதிகாரத்தை மேலும் கட்டுப்படுத்தி, அரசியலமைப்பினால் உறுதிசெய்யப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுகிறது என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த நிலையில், மேலதிக மன்றாடியார் நாயகம் நெரின் புள்ளே, முன்மொழியப்பட்டுள்ள இந்த சட்டமூலத்தின் மூலம் மக்களின் கருத்து சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.