பீலேவுக்கு தொப்பி! மெஸ்ஸிக்கு கருப்பு அங்கி:கௌரவிப்புகள் மாறுபட்டதற்கான காரணம் இதுதான்
கத்தாரில் நடந்து முடிந்த FIFA 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் ஆர்ஜென்டினா வெற்றி பெற்றது.
பொதுவாக ஒவ்வொரு நாட்டிலும் உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி நடைபெறும் போதும் அந்நாட்டின் சிறப்பு வாய்ந்த ஒன்று வெற்றி பெற்ற அணியின் தலைவருக்கு வழங்கப்படுவது இயல்பு.
இதற்கமைய கத்தார் உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் ஆர்ஜென்டினா அணிக்கு வெற்றி கிண்ணத்தை வழங்கும் போது அணி தலைவரான மெஸ்ஸிக்கு கருப்பு நிற அங்கி ஒன்று அணியப்பட்டது.
கறுப்பு நிற அங்கி
இந்த அங்கி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதனையடுத்து ஏன் இந்த அங்கி அணியப்பட்டது எனவும் இதற்கு பின்னால் இருக்கும் காரணங்கள் குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அங்கி 'பிஷ்ட்ஸ்' என்று அழைக்கப்படும். இது ஆட்டு முடி மற்றும் ஒட்டகத்தின் தோலினால் செய்யப்பட்டுள்ளது.
அக்காலத்தில் போருக்கு செல்லும் மன்னர் அல்லது தளபதி ஆகியோர் இதனை அணிந்து செல்வார்கள்.
தற்போதைய காலத்தில் திருமணம், பதவியேற்கும் போது அல்லது பட்டம் பெறும் போது இந்த அங்கியை அந்நாட்டு மக்கள் அணிந்துகொள்வார்கள்.
எனவே உலகக் கிண்ணத்தை கைப்பற்றியதால் அவருக்கு இந்த அங்கி அணிவிக்கப்பட்டுள்ளது.
மெஸ்ஸியின் சர்ச்சைக்குரிய செயல்
இவ்வாறு அணியப்பட்ட கறுப்பு நிற அங்கியை மெஸ்ஸி சிறிது நேரத்தில் கழற்றிவிட்டார். பின்னர் இது பெரும் விவாதத்தை கிளப்பியது. அவர் ஏன் அப்படி செய்தார் என பல கேள்விகள் எழுந்தன.
முதலில் கருப்பு நிறத்தில் அங்கி அணியப்பட்டதே தவறு. இது அபசகுணம் என்று சிலர் வாதிட்டனர்.
பின்னர் அவர் அங்கியை கழற்றி வைத்துவிட்டு கத்தார் நாட்டின் மரியாதையை அவமதித்துவிட்டார் என்றும் விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில் இந்த அங்கியை நீண்ட நேரம் அணிந்திருக்கக்கூடாது. எனவேதான் மெஸ்ஸி அதனை கழற்றிவிட்டார் என்று இதற்கு கத்தார் நாட்டை சேர்ந்தவர்களே விளக்கம் கொடுத்துள்ளனர்.
பீலேவுக்கு தொப்பி
இதேபோன்று கடந்த 1970ல் FIFA உலகக் கிண்ணத்தை வென்ற பின்னர் பிரேசில் அணியின் தலைவர் பீலேவுக்கு ஒரு விசித்திரமான தொப்பி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்த போட்டி மெக்சிகோவில் நடைபெற்றது. போட்டியில் பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
அப்போது பீலேவுக்கு உலக கோப்பை வழங்கப்படுவதற்கு முன்னர் தொப்பி ஒன்று அணிவிக்கப்பட்டது.
இந்த தொப்பி 'மெக்சிகன் சோம்ப்ரெரோ' என்று அழைக்கப்படுகிறது.
பொதுவாக மெக்சிகோவில் வெயில் அதிகம் இருப்பதால் அதிலிருந்து முகத்தையும் கண்களையும் பாதுகாக்க இந்த தொப்பிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பின்னர் மக்கள் மத்தியில் தங்களை செல்வாக்கானவர்களாகவும், கௌரவக்காரர்களாகவும் காட்டிக்கொள்ள நினைப்பவர்கள் பல்வேறு வடிவங்களில், அலங்காரங்களில் இந்த தொப்பியை பயன்படுத்தியுள்ளனர்.