கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட யுவதி : திருமணமான காதலன் கைது
கொழும்பின் புறநகர் பகுதியான அங்குலானை சயுர அடுக்குமாடி குடியிருப்பில் 24 வயதுடைய யுவதியை கொடூரமாக கொலை செய்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் நேற்று அங்குலானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாதுவ, குடா வஸ்கடுவ பிரதேசத்தை சேர்ந்த ஹேஷலா காவிந்தி சில்வா என்ற 24 வயதான யுவதி துடைப்பத்தாலும், கைகளாலும், கால்களாலும் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் பாவனை
மனைவியை பிரிந்து வாழும் திருமணமான சந்தேக நபர் கடந்த 8 மாதங்களாக உயிரிழந்த யுவதியுடன் தொடர்பை பேணி வந்துள்ளார்.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, சந்தேக நபர் கடும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனத் தெரியவந்துள்ளது. அவர் இந்த யுவதியையும் போதைப்பொருள் பாவனைக்கு தூண்டியுள்ளதால், யுவதியின் பெற்றோர் அவரை வீட்டில் சேர்க்க மறுத்துள்ளனர்.
சந்தேக நபரின் சகோதரர் மற்றும் தாய் ஆகியோர் அங்குலானை சயுர அடுக்குமாடி குடியிருப்பில் தனித்தனி வீடுகளில் வசித்து வருகின்றனர்.
யுவதிக்குத் தேவையான உணவை சந்தேக நபர் தனது தாய் அல்லது சகோதரரின் வீட்டிலிருந்தே பெற்றுக்கொடுத்து வந்துள்ளார்.
யுவதி அடித்துக் கொலை
கடந்த 26ஆம் திகதி மாலை சயுர அடுக்குமாடி குடியிருப்பின் 8வது மாடியில் உள்ள கொன்க்ரீட் தளத்தில் இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது ஆத்திரமடைந்த சந்தேக நபர், யுவதியை துடைப்பத்தாலும், கைகளாலும், கால்களாலும் மிகக் கொடூரமான முறையில் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
மறுநாள் மதியம், கொன்க்ரீட் தளத்தில் யுவதி ஒருவர் விழுந்து கிடப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் அங்கு சென்று பார்த்தபோது, அவர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
யுவதியின் உடல் முழுவதும் பல இடங்களில் காயங்கள் காணப்பட்டதுடன், உடல் நீல நிறமாக மாறியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
யுவதியின் சடலம் தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.