அவதானமாக செயற்படவும்! இலங்கை மக்களுக்கு மத்திய வங்கியின் அவசர எச்சரிக்கை
காடு மற்றும் தோட்ட முதலீட்டுத்திட்டங்கள் என்ற போர்வையில் பொதுமக்களிடமிருந்து சட்டவிரோதமாக பணம் மோசடி செய்யப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இவ்வாறு மோசடி போர்வையில் பொதுமக்களிடமிருந்து சட்டவிரோதமாக வைப்புத்தொகை வசூலித்ததாகக் கூறப்படும் 18 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை அடையாளம் கண்டு இலங்கை மத்திய வங்கி விசாரித்து வருவதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நேற்று (28) தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இந்த ஆண்டின் முதல் நாணயக்கொள்கை அறிக்கையை அறிவிக்கும் மத்திய வங்கியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஆளுநர் இதனை தெரிவித்துள்ளார்.

பொதுமக்களிடமிருந்து பணத்தை திருப்பிச்செலுத்துவதாக உறுதியளித்து நிதியினை சேகரிப்பது நிதி வணிகச் சட்டத்தின் கீழ் சட்டவிரோத வைப்புத்தொகை சேகரிப்பாகும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பில் அடையாளம் காணப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் குறித்து தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
எளிதில் ஈர்க்கப்படும் மோசடி
இதுபோன்ற திட்டங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், மோசடிகளுக்கு இரையாகாமல் இருக்குமாறு பொதுமக்களை எச்சரித்துள்ளார்,

மேலும், பலர் தோட்ட மற்றும் பயிர் தொடர்பான முதலீட்டுத் திட்டங்களுக்கு எளிதில் ஈர்க்கப்படுகின்றார்கள் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே நிதியை வழங்குவதற்கு முன்பு முதலீட்டு நிறுவனங்களின் சட்டபூர்வமான தன்மையை சரிபார்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.