எமது நிலத்தை எம்மிடம் ஒப்படையுங்கள் : மன்னாரில் இருந்து தபால் மூலம் ஜனாதிபதிக்கு கோரிக்கை
வடக்கு மாகாண ரீதியாக மக்களின் காணிகளை விடுவிக்க கோரி 'எமது நிலத்தை எம்மிடம் மீள ஒப்படையுங்கள்' எனும் தொனிப் பொருளில் நிலத்தை இழந்த மக்களின் குரல் அமைப்பின் ஊடாக தபால் மூலம் ஜனாதிபதிக்கு அழுத்தத்தை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது மன்னாரில் இன்று (04.03.2024) நடைபெற்றுள்ளது.
தெளிவூட்டல்கள்
மக்களின் காணிகளை அரசாங்கம் மற்றும் முப்படையினர் கையகப்படுத்தி குறித்த காணிகளில் வணிக செயற்பாடுகள் மற்றும் விவசாய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் காணிக்கு உரிமையாளர்களான மக்கள் காணிகள் இன்றியும் வாடகை வீடுகளிலும் வசித்து வந்துள்ளனர்.
இதன் அடிப்படையில் மக்களின் காணிகளில் குடியிருக்கும் படையினர் காணிகளை விடுவித்து மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஜனாதிபதியின் காரியாலயத்திற்கு ஐயாயிரம் தபால் கடிதங்கள் அனுப்பி வைக்கும் முகமாக குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
நிகழ்வில் காணிகள் தொடர்பான தெளிவூட்டல்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் நிகழ்வு நிறைவடைந்த பின்னர் மன்னார் தபாலகத்தின் இருந்து ஜனாதிபதி காரியாலயத்திற்கு காணி விடுவிப்பு தொடர்பான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய 5 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |