20 முதல் 30 ஆண்டுகளுக்கு சர்வாதிகார ஆட்சியை தொடரவே அரசு திட்டம் - நாமல் எம்.பியின் கண்டுபிடிப்பு
எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள், சட்டத்தரணிகள், மருத்துவர்கள் மற்றும் மகா சங்கத்தினரை அடக்கி, தமது சர்வாதிகார ஆட்சியை இருபது அல்லது முப்பது ஆண்டுகளுக்குத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதே தற்போதைய அரசின் உண்மையான திட்டமாகும் என்று சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பு, ஹோமாகம பகுதியில் நேற்று(26.07.2026) நடைபெற்ற விசேட மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
நீதிமன்ற நெருக்கடிகளைத் தீர்க்க
மேலும் உரையாற்றுகையில், "அதிகாரத்துக்கு வரும்போது மக்களுக்கு வழங்கிய பொய் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அரசு, இன்று அடக்குமுறையையே பிரதான ஆயுதமாகப் பயன்படுத்துகின்றது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நீதித்துறைச் சிக்கல்கள் குறித்துக் குரல் எழுப்பும்போது, அரசு அச்சுறுத்தல்களிலும் சேறு பூசும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றது.
பொலிஸ் திணைக்களத்தைத் தனது அரசியல் கட்சி அலுவலகத்தின் கிளையாக மாற்றியிருப்பதால் சாதாரண மக்களுக்கு நீதி கிடைப்பதில்லை.
அதேபோல், உரப் பிரச்சினைக்காகப் போராடிய விவசாயிகளைச் சட்டவிரோத மதுபான உற்பத்தியாளர்கள் என்றும், சுகாதாரச் சீர்கேடுகளைச் சுட்டிக்காட்டிய மருத்துவர்களைத் திருடர்கள் என்றும் இழிவுபடுத்திய அரசு, மகா சங்கத்தினருக்கும் ஆன்மீகத் தலைவர்களுக்கும் எதிராகச் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றது.
மறுபுறம், அரசால் போஷிக்கப்படும் பாதாள உலகக் குற்றக்குழுக்கள் சுதந்திரமாக உலா வருகின்றன. கடந்த 48 மணிநேரத்தில் பல இடங்களில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ள போதிலும், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பாதுகாப்புப் பிரதி அமைச்சர் எதிர்க்கட்சிகளை அடக்குவதிலேயே குறியாக உள்ளார்.
நாடாளுமன்ற விவாதங்களின் போது நீதிமன்ற நெருக்கடிகளைத் தீர்ப்பதை விடுத்து, ராஜபக்சக்களுக்கு எதிரான வழக்குகளை விரைவுபடுத்துவதையுமே ஆளும் கட்சியினர் முதன்மைப்படுத்தினர்.
நாடாளுமன்ற நிதிக்குழு
பெருந்தோட்ட வர்த்தகர்களுக்கும் பெரும் தொழிலதிபர்களுக்கும் வரிச் சலுகைகளை வழங்கிவிட்டு, கிராமப்புற எளிய மக்கள் மீது அரசு அதிக வரிகளைச் சுமத்துகின்றது.

அண்மையில் 'ஹெக்கர்' ஒருவரால் திருடப்பட்டதாகக் கூறப்படும் நிதி இழப்பு விவகாரத்தில், நாடாளுமன்ற நிதிக்குழுவின் முன்னிலையில் இலங்கை மத்திய வங்கியும் நிதி அமைச்சும் ஒன்றையொன்று குற்றம் சாட்டிக்கொண்டன.
இறுதியில் இந்த இழப்பையும் மக்கள் மீதே சுமத்தத் தீர்மானித்துள்ளனர். ஜனாதிபதி மாளிகையைப் பராமரிக்க ஆயிரக்கணக்கான ஊழியர்கள் அமர்த்தப்பட்டுப் பொதுமக்களின் பணம் வீணடிக்கப்படுகின்றது.
மருத்துவமனைகளில் மருந்துப் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதியுறுவதுடன், தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் சரியாகச் செயற்படாததால் டெங்கு நோயும் தீவிரமடைந்துள்ளது.
இவ்வாறு எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள், சட்டத்தரணிகள், மருத்துவர்கள் மற்றும் மகா சங்கத்தினரை அடக்கி, தமது சர்வாதிகார ஆட்சியை இருபது அல்லது முப்பது ஆண்டுகளுக்குத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதே தற்போதைய அரசின் உண்மையான திட்டமாகும்.
எனவே, அரசின் இந்த மக்கள் விரோதப் போக்குக்கும், நீதித்துறையின் சுயாதீனத்தைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கும் எதிராக அனைத்து மக்களும் வலுவான அரசியல் சக்தியாக அணிதிரள வேண்டும்" என்றும் குறிப்பிட்டு்ள்ளார்.