அரசாங்கத்தை மக்கள் தொடர்ந்தும் ஆதரிக்கின்றனர் – பிரதீப்குமார்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை மக்கள் தொடர்ந்தும் ஆதரித்து வருவதாக பெருந்தோட்ட மற்றும் சமுதாய உள்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினர் எவ்வாறான விமர்சனங்களை முன்வைத்த போதிலும், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடனும் தற்போதைய அரசாங்கத்துடனுமே நிற்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
ஹட்டனில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தொடர்ந்து எதிர்க்கட்சி முற்றிலும் அரசியல் ரீதியாக நலிவடைந்து போயுள்ளது என்பது தெளிவாகிறது என தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்வதை விடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் பலமானதொரு எதிர்க்கட்சியை உருவாக்கவே முயல வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இன்று எதிர்க்கட்சியைச் சுற்றி சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்கள், பிணையில் இருப்பவர்கள் மற்றும் பல்வேறு ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய நபர்களே சூழ்ந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ஜனாதிபதியுடனும் அரசாங்கத்துடனும் இருக்கிறார்கள் எனவும், குறிப்பாக பெருந்தோட்டங்களைச் சேர்ந்த மக்களில் 95 சதவீதமானோர் அரசாங்கத்துக்கே ஆதரவாக உள்ளனர் எனவும் பிரதி அமைச்சர் பிரதீப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.