சர்வதேச கடலில் சிக்கிய 40 ஈரானிய மாலுமிகள்! இலங்கை எடுத்த முக்கிய நடவடிக்கை
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே சர்வதேச கடல் பகுதியில் சிக்கியுள்ள வணிகக் கப்பல்களில் இருந்த 40 ஈரானிய மாலுமிகள், மருத்துவக் காரணங்களுக்காக அவசர மனிதநேய உதவியின்கீழ் இலங்கையினால் மீட்கப்பட்டு தாயகம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
காலி துறைமுகத்தில் இருந்து சுமார் 24 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டுள்ள ஈரானிய வணிகக் கப்பல்களில் இருந்த மாலுமிகளுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு மற்றும் மருத்துவ அவசரநிலை காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஈரானிய தூதரகத்தின் கோரிக்கை
கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தின் கோரிக்கைக்கு அமைவாக, வெளியுறவு அமைச்சு மற்றும் பாதுகாப்புத் தரப்பினரால் குறித்த மாலுமிகள் கரைக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.
கரைப்பகுதியில் தேவையான மருத்துவச் சிகிச்சைகளைப் பெற்ற பின்னர், 40 மாலுமிகளும் நேற்று ஈரானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்க தடைகள் மற்றும் முற்றுகைகள் காரணமாக ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் மற்றும் வணிகக் கப்பல்கள் சர்வதேச கடல் பகுதியில் தொடர்ந்தும் நங்கூரமிட்டுள்ளன.
இந்த நிலையில், இலங்கை தனது பிராந்திய கடல் எல்லைக்கு அப்பாற்பட்ட பகுதியில் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக சுதந்திரமான கடல் போக்குவரத்தை உறுதி செய்வதோடு, மனிதநேய அடிப்படையிலான உதவிகளையும் வழங்கி வருவதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.