அரசாங்கம் ஏமாற்றியது: சஜித் குற்றச்சாட்டு
சுதந்திர தினம், வெசாக் பௌர்ணமி தினம், பொசோன் பௌர்ணமி தினம் போன்ற முக்கிய நாட்களில் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதாக அரசாங்க தரப்பு கூறியது முற்றிலும் பொய் மற்றும் ஏமாற்று நடவடிக்கை மாத்திரமே என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சஜித்திடம் ரஞ்சன் கூறிய செய்தி

உயர் கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்த பின்னர், நாட்டிற்கு மிகவும் பலன் தரும் வகையிலும் அர்த்தமுள்ள வகையில் சேவை செய்ய ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவேன் என நாட்டுக்கு செய்தியை வழங்குமாறு ரஞ்சன் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெலிகடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் நலன் அறியும் நோக்கில் நேற்று சிறைச்சாலைக்கு சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர், அதன் பின்னர் செய்தியாளர்களிடம கருத்து வெளியிடும் போதே இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்திடம் உரிய வேலைத்திட்டம் இல்லை

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பாக வாரந்தோறும் ஒவ்வொரு கதைகளை அரசாங்கம் கூறுகிறது. அதனை தவிர நாட்டை கட்டியெழுப்பும் உரிய வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் இல்லை.
எனினும் அரசாங்கத்தை பொறுப்பேற்ற போது 24 மணி நேரத்தில் பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறினர். மக்கள் எதிர்பார்ப்பது விளக்கங்கள் அல்ல.
பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்பதே மக்களின் தேவை எனவும் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.