400 ரூபாவை தாண்டும் டொலரின் மதிப்பு..! அடுத்த சில வருடங்களில் நாடு திவாலாகிவிடும் என பகிரங்க எச்சரிக்கை
இலங்கை மத்திய வங்கி டொலர்களை வாங்கிக் கொண்டே இருக்கிறது, இதன் காரணமாக டொலரின் மதிப்பு அதிகரித்து ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதாக பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
சந்தையில் இருந்து இவ்வளவு பெரிய அளவில் டொலர்கள் வாங்கப்பட்டொல், டொலரின் மதிப்பு நிச்சயமாக 400 ரூபாயைத் தாண்டும் அபாயம் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
கடனை திருப்பிச் செலுத்தல்
அவர் மேலும் தெரிவிக்கையில், 2027ஆம் ஆண்டிலிருந்து, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான கடனைத் திருப்பிச் செலுத்த நமக்கு 11.1 பில்லியன் டொலர் தேவைப்படுகிறது. நம்மிடம் கையிருப்பில் 5 பில்லியன் டொலர் மட்டுமே உள்ளது. எனவே மீதமுள்ள தொகையை சந்தையிலிருந்து டொலர்களை வாங்குவதன் மூலம் திரட்ட வேண்டும்.
இந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தேவையான டொலர்களைக் கண்டறிய, மத்திய வங்கி அந்நியச் செலாவணி சந்தையிலிருந்து டொலர்களை வாங்க வேண்டும்.
மத்திய வங்கி டொலர்களை வாங்கிக் கொண்டே இருக்கிறது, டொலரின் மதிப்பு அதிகரித்து, ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்து வருகிறது.
சந்தையில் இருந்து இவ்வளவு பெரிய அளவில் டொலர்கள் வாங்கப்பட்டால், டொலரின் மதிப்பு நிச்சயமாக 400 ரூபாயை தாண்டும் அபாயம் உள்ளது. அப்படி நடந்தால், ஏற்கனவே வாழ்க்கைச் செலவால் நெருக்கடியில் இருக்கும் மக்களின் வாழ்க்கைச் சுமை மேலும் அதிகரிக்கும். இப்போது வெளிநாட்டுக் கடன்களை அடைக்க டொலர்களே இல்லை.

டொலரின் மதிப்பு
சந்தையில் இருந்து டொலர்களை வாங்கச் சென்றால், டொலரின் மதிப்பு 400ஐத் தாண்டும், பொருட்களின் விலைகள் உயரும், வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும், அரசாங்கம் பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்ளும்.
நாம் டொலர்களை வாங்கவில்லை என்றால், 2027ஆம் ஆண்டுக்குள், அல்லது 2028-29ஆம் ஆண்டுக்குள், நாட்டினால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் மீண்டும் திவாலாகிவிடும்.
2027ல் நாம் 2.5 பில்லியன் டொலர்களை மட்டுமே செலுத்த நேர்ந்தால், நமது டொலர் வருவாயை அதிகரிப்பதன் மூலமும், டொலர் இறக்குமதியின் செலவைக் குறைப்பதன் மூலமும் இந்தச் சூழ்நிலையை நம்மால் கட்டுப்படுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.