நிந்தவூர் பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தர் கைது
நிந்தவூர் பிரதேச செயலாளரை கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் பெண் அரச உத்தியோகத்தர் ஒருவர் நிந்தவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட வேளையில் அதிர்ச்சியால் மயங்கி விழுந்த நிலையைத் தொடர்ந்து பொலிஸ் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸாரால் கைது
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமையின் போது குறித்த பெண் உத்தியோகத்தர் காணொளி எடுத்து அச்சுறுத்தல் விடுத்ததுடன், அக்காணொளியை சமூக வலைத்தளமான முகநூலிலும் பதிவேற்றம் செய்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பிரதேச செயலக நிர்வாகத்தினரால் நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

முறைப்பாட்டிற்கு அமைவாக, செவ்வாய்க்கிழமை (18) மாலை வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காகக் குறித்த பெண் அரச உத்தியோகத்தர் நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அவசர சிகிச்சை
விசாரணைகளின் பின்னர் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்ட வேளையில், திடீரென மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாக அருகில் உள்ள நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு அவசர சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவருக்குப் பெண் பொலிஸாரின் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதுடன், நிந்தவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.