இலங்கையை வீழ்த்தி டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்ற இந்தியா
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
முதலாவது இன்னிங்ஸ்
இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி மைதானத்தில் நடந்தது.
நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 462 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

தேவ்தத் படிக்கல் 167 ஓட்டங்கள் மற்றும் கே.எல். ராகுலின் 82 ஓட்டங்களையும் பெற்று 116.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 462 ஓட்டங்களைக் குவித்தது.
இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜயசூரிய 4 விக்கெட்டுகளையும், கேசர நுவன்த 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்சைத் தொடர்ந்த இலங்கை அணி,
சோனல் தினுஷவின் போராட்டமிக்க 100 ஓட்டங்கள் மற்றும் நிரோஷன் திக்வெல்லவின் 80 ஓட்டங்களின் சிறப்பான பங்களிப்பால் 79.4 ஓவர்களில் 284 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பில் மானவ் சுதார் 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
2ஆவது இன்னிங்ஸ்
முதல் இன்னிங்சில் 178 ஓட்டங்கள் முன்னிலையுடன் தனது 2ஆவது இன்னிங்சைத் தொடர்ந்த இந்திய அணிக்கு, ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி 66 ஓட்டங்களையும் தேவ்தத் படிக்கல் 44 ஓட்டங்களையும் பெற்றுத் தந்தனர்.
இலங்கை அணியின் அசித பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை வீழ்த்த, இந்திய அணி 48.5 ஓவர்களில் 193 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்படி, இலங்கை அணிக்கு 372 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

372 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, போட்டியின் ஐந்தாவது நாளான இன்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 206 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக சோனல் தினுஷ 84 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 59 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் இந்திய அணியின் மானவ் சுதார் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் மூலம், இந்திய அணி 165 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.