கல்லெல்லே சுமநசிரி தேரருக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள முக்கிய பதவி
சபரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக, அகமஹா பண்டித சிரேஷ்ட பேராசிரியர் கல்லெல்லே சுமநசிரி தேரரை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நியமித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் (PMD) தகவல்படி, இன்று (23) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாரநாயக்க, இதற்கான நியமனக் கடிதத்தை தேரரிடம் கையளித்தார்.
நியமனம் கையளிப்பு
மொலகொடவில் உள்ள கோடமுதுங்கல ராஜமஹா விகாரையின் தலைமை விகாராதிபதியான சுமநசிரி தேரர், இதற்கு முன்னர் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார்.

இவர் களனி பல்கலைக்கழகத்தில் பௌத்த தத்துவவியலில் இளங்கலைப் பட்டத்தையும், தத்துவவியலில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
மேலும், இந்தியாவின் டெல்லி பல்கலைக்கழகத்தில் தத்துவவியலில் முதுகலைப் பட்டத்தையும், முனைவர் பட்டத்தையும் (PhD) பெற்றுள்ளார்.
இது தவிர, சீனாவின் பெய்ஜிங் பல்கலைக்கழகத்தில் சீன மொழிக்கான உயர் டிப்ளோமா படிப்பையும் அவர் நிறைவு செய்துள்ளார்.