வவுனியா- வேப்பங்குளத்தில் அரச ஊழியர்கள் போராட்டம்
வவுனியா- ஓமந்தை வேப்பங்குளம் அரச ஊழியர் வீட்டு திட்டத்திற்கு செல்லும் பாதையால் கனரக வாகனங்கள் செல்வதால் வீதி சேதம் அடைவதாக தெரிவித்து மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று(11) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஓமந்தை வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள கருங்கல் குவாரி ஒன்றிலிருந்து தினமும் 60 இக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் சென்று வருவதனால் சிறிய வீதியாக உள்ள குறித்த வீதி தற்போது சேதமடைந்து மக்கள் பாவனைக்கு உதவாத வகையில் மாற்றம் அடைந்து இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
போராட்டம்
குறித்த வீதியின் ஊடாக கனரக வாகனங்கள் செல்வதை அனுமதிக்க வேண்டாம் எனத் தெரிவித்தும், அப்பகுதி மக்கள் இதன் காரணமாக விபத்துகளுக்கு உள்ளாகுவதாகவும் தெரிவித்தும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓமந்தை வேப்பங்குளம், விளாத்திக்குளம் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் வீதியை ஊடறுத்து செல்லும் தொடருந்து பாதையில் பாதுகாப்பு கடவையின்மை மற்றும் தொடருந்து செல்கின்ற போது சமிச்சைகள் இல்லை எனவும் இதன்போது தெரிவித்திருந்ததுடன் அதனை அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.
இதன்போது குறித்த பகுதிக்கு வருகை தந்த வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு கலந்துரையாடியதோடு இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சரோடு கலந்துரையாடுவதாகவும் தெரிவித்திருந்தார்.
மனு
இந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஜனாதிபதிக்கு கையளிக்கும் வகையில் மனு ஒன்றும் வழங்கப்பட்டிருந்தது.
அங்கு வருகை தந்த ஓமந்தை பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களோடு கலந்துரையாடியதுடன் பிரதேச சபை தலைவர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், கற்குவாரியின் உரிமையாளர்களை அழைத்து இது தொடர்பில் ஒரு முடிவை எட்டுவதாக தெரிவித்திருந்தனர்.
இதன் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டதோடு நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த பகுதிக்குச் சென்று கல்குவாரியை பார்வையிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









TRP-வில் புதிய உச்சத்தை தொட்ட எதிர்நீச்சல் சீரியல்.. இதுவரை இவ்வளவு ரேட்டிங் வந்ததே இல்லை Cineulagam
