தங்கத்திற்காக கொலை செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவை ஊழியர்
கொட்டுகுடா பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றில் நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தங்க நகைகளை திருடும் நோக்கில் வீட்டுக்குள் புகுந்த நபரே இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டில் வசித்து வந்த ஸ்ரீலங்கன் விமான சேவையின் போக்குவரத்து திணைக்கள பணிப்பாளரான கே.அனுர இந்திரகுமார பெர்னாண்டோ (61 வயது) என்ற நபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
கத்திக்குத்து
கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயமடைந்த அவர், கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தன்று அனுரவின் மனைவியும், அவரது மூன்று மகள்களும் தேவாலயம் சென்றிருந்ததாகவும், வீட்டு பணியாளர்களும் அனுரவும் மட்டுமே வீட்டில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தங்க நகை
அடையாளம் தெரியாத நபரொருவர் மேல் தளத்திற்குள் புகுந்து பணிப்பெண்ணை கட்டி வைத்துவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க நகைகளையும் திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கீழ் மாடியில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த அனுரவை கத்தியால் குத்தி பலத்த காயம் ஏற்படுத்திய நிலையில், அவர் அணிந்திருந்த பெறுமதியான தங்க நகைகளையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இத்தகவல் அனுரவின் வீட்டில் இருந்த வீட்டுப் பணிப்பெண் மூலம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.