உள்நுழையும் ஜெர்மன் கப்பல்: சீனாவின் எதிர்ப்புக்கு இலங்கை அரசு பதிலடி
இலங்கை கடற்பரப்பில் வெளிநாட்டு கப்பலுக்கு அனுமதி அளித்ததற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அது, 'ஆராய்ச்சி கப்பல் இல்லை' என இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது.
சீன இராணுவத்தின் விண்வெளி, சைபர், மின்னணு படைப் பிரிவு சார்பில் பல்வேறு பெயரில் உளவுக் கப்பல்கள் இயக்கப்படுகின்றன. இந்தக் கப்பல்களை ஆராய்ச்சி கப்பல் எனக்கூறி, இலங்கையின் கடற்பரப்பில் நிறுத்தி கடந்த சில ஆண்டுகளாக ஆய்வுகளை சீனா மேற்கொண்டதாக சர்வதேச தரப்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்நிலையில், இவற்றை ஆராய்ச்சி கப்பல் என சீன அரசு கூறினாலும், இவை அபாயகரமான உளவு கப்பல்கள் என அமெரிக்க, ஐரோப்பிய பாதுகாப்புத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அரசிடம் அனுமதி
இதையடுத்து, இந்தியா இலங்கை அரசுக்கு எதிராக கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. இதற்கிடையே, கடந்த ஆண்டு இறுதியில் ஆராய்ச்சிக் கப்பல் ஒன்றை சீனா நிறுத்த, இலங்கை அரசிடம் அனுமதி கோரியிருந்தது.
இதன்படி இந்தியா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பால், அடுத்த ஓராண்டுக்கு வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல்களை இலங்கை கடற்பரப்பில் நிறுத்த அனுமதிக்க மாட்டோம் என இலங்கை அரசு திட்டவட்டமாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் ஐரோப்பிய நாடான ஜெர்மனிக்கு சொந்தமான ஆராய்ச்சி கப்பலுக்கு, இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளதாக நேற்றையதினம் தகவல் வெளியாகியது.
அரசு விளக்கம்
வெளிநாட்டு கப்பல்களை நிறுத்த தடை விதிக்கப்பட்ட நிலையில், முதன்முதலாக ஜெர்மன் கப்பலுக்கு மட்டும் அனுமதி அளித்ததற்கு, இலங்கையில் உள்ள சீன துாதரகம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நிலுகா கடுராகாமுவா கூறுகையில்,
“இலங்கை கடற்பரப்பில், வெளிநாடுகளின் ஆராய்ச்சி கப்பல்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது வந்துள்ள ஜெர்மனி கப்பல், எரிப்பொருள் நிரப்புவது உள்ளிட்ட பணிகளை மட்டுமே மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” என விளக்கம் அளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |