கடற்றொழிலாளர்களது உணர்வுகளை நான் எப்போதும் மதிப்பவன் : அமைச்சர் டக்ளஸ்
வடக்கின் கடற்றொழிலாளர்களது உணர்வுகளை நான் எப்போதும் மதிப்பவன் என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடக்கு கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்துவரும் உண்ணாவிரதப் போராட்டமும் வெற்றி கண்டிருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால்
கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலும் நாட்டில் நிலவும்
சில பிரச்சினைகள் தொடர்பிலும் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு
கூறியுள்ளார்.
உண்ணாவிரதப் போராட்டம்
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் எல்லைத் தாண்டியதும், அத்துமீறியதும், தடைசெய்யப்பட்ட கடற்றொழில் உபகரணங்களைக் கொண்ட கடற்றொழில் முறைமையினாலும், பாதிக்கப்பட்டு வருகின்ற வடக்கு கடற்றொழிலாளர்களின் நிலைமைகளை உலகுக்கு எடுத்துக் காட்டும் வகையில் யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்து வருகின்ற உண்ணாவிரதப் போராட்டமானது இன்று (21) மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.
இந்த விடயம் தொடர்பில் நாங்கள் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
யாழ்ப்பாணத்தில் நேற்றும் மூன்று இந்திய இழுவை மடி வலைப் படகுகள் கடற்படையினரால் பிடிக்கப்பட்டு 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மன்னாரில் இரு படகுகள் பிடிக்கப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களின் கடற்றொழில் துறை சார்ந்த அமைச்சர்கள் இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் பிரச்சினைகள் தொடர்பில் என்னுடன் கலந்துரையாடி வருகின்றனர்.
அதேபோல் இம் மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களும் என்னுடன் தொடர்பு கொண்டு வருகின்றர். முதலமைச்சர்களைச் சந்தித்து கலந்துரையாடுவது தொடர்பிலும் ஒரு சூழல் உருவாகி வருகின்றது.
அவர்கள் இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் மூலமான பாதிப்புகளை உணர்ந்து கொண்டிருப்பதாகவே தெரிய வருகின்றது. எனவே, பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு சுமுகமான தீர்வினை எட்ட முடியும் என நான் எதிர்பார்க்கிறேன்.
இதேநேரம், வடக்கின் கடற்றொழிலாளர்களது உணர்வுகளை நான் எப்போதும் மதிப்பவன். அவர்களது போராட்டங்களை நான் விளங்கிக் கொள்கின்றேன். அவர்களது போராட்டங்கள் சிறந்த பயன்களைத் தந்திருப்பதாகவே நான் கருதுகின்றேன்.
தற்போது கடற்றொழிலாளர்களது உண்ணாவிரதப் போராட்டமும் வெற்றி கண்டிருக்கிறது. எனவே, உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு நான் அவர்களிடம் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்” என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |