மன்னார் நகர சபையின் தவிசாளர் மீதான விசாரணை! எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
மன்னார் நகர சபைத் தவிசாளர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக வடக்கு மாகாண ஆளுநரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் கால எல்லை நாளையுடன் நிறைவடைவதனை அடுத்து, அந்த வர்த்தமானி மீளப்பெறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த தவிசாளருக்கு எதிரான வழக்கும் இரு தரப்பு இணக்கத்துடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
மன்னார் நகர சபைத் தவிசாளரினால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனு மீதான விசாரணை நேற்று மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த முடிவு எட்டப்பட்டது.
விசாரணை
இந்த வழக்கின் நேற்றைய அமர்வில், எதிர்மனுதாரர்களான மாகாண ஆளுநர் உள்ளிட்ட தரப்பினர் சார்பில் அரச சட்டவாதி முன்னிலையாகியிருந்தார்.

இதன்போது நீதிமன்றத்துக்கு விடயங்களைத் தெளிவுபடுத்திய அரச சட்டவாதி, குறித்த விசாரணையை முன்னெடுப்பதற்காக வெளியிடப்பட்டிருந்த விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஆங்கில மற்றும் சிங்கள மொழியாக்கங்களில் 'நகர சபை' என்பதற்குப் பதிலாக 'மாநகர சபை' எனத் தவறுதலாகக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், தமிழ் மொழியில் அது சரியான முறையில் வெளியிடப்பட்டுள்ளதனை மன்றின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.
மேலும், சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் இவ்வாறானதொரு விசாரணையை முன்னெடுப்பதற்கு மூன்று மாத கால அவகாசமே காணப்படுகின்றது.அந்தச் சட்டபூர்வமான கால அவகாசம் எதிர்வரும் ஜூன் 4ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.
கால அவகாசம்
எனவே, இந்தக் குறுகிய காலப்பகுதிக்குள் விசாரணைகளை முழுமையாக நடத்தி முடிப்பதற்குப் போதிய கால அவகாசம் இல்லாமையைக் கருத்திற்கொண்டு, குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறுவதற்கு எதிர்மனுதாரர்கள் தரப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அரச சட்டவாதி மன்றுக்குத் தெரியப்படுத்தினார்.

அதற்கமைய, குறித்த வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்படுவதாக மன்றில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அரச சட்டவாதியின் இந்த அறிவித்தலையடுத்து, மனுதாரரான தவிசாளர் தரப்புச் சட்டத்தரணியின் இணக்கத்துடன் குறித்த வழக்கானது நீதிமன்றத்தால் முடிவுறுத்தப்பட்டது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam
சொந்த உழைப்பில் பிரம்மாண்ட வீடு கட்டியுள்ள தொகுப்பாளினி மணிமேகலை... House Warming புகைப்படங்கள் Cineulagam