இலங்கையில் எரிபொருள் விலை மிகக்குறைவு : விளக்கம் கூறும் அமைச்சர்
இலங்கையில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் பல அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகக் காணப்படுவதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 4,365 ரூபாயாக உள்ளது. அதே சிலிண்டரின் விலை ஐக்கிய இராச்சியத்தில் இலங்கை ரூபாய் மதிப்பில் 16,638 ரூபாயாகவும், அயர்லாந்தில் 11,536 ரூபாயாகவும், பிரான்ஸில் 10,652 ரூபாயாகவும், துருக்கியில் 8,340 ரூபாயாகவும் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் விலை குறைவு
உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் குறைந்த விலையில் சமையல் எரிவாயு விநியோகிக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் தற்போது ஒக்டேன் 95 பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 490 ரூபாயாக உள்ளது. சிங்கப்பூரில் 834 ரூபாயாகவும், இஸ்ரேலில் 847 ரூபாயாகவும், ஜோர்தானில் 645 ரூபாயாகவும், பிரித்தானியாவில் 757 ரூபாயாகவும், பிரான்ஸில் 755 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இலங்கையில் தற்போது டீசல் லீட்டர் ஒன்று 397 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிங்கப்பூரில் 936 ரூபாயாகவும், இஸ்ரேலில் 804 ரூபாயாகவும், பிரித்தானியாவில் 879 ரூபாயாகவும், ஜேர்மனியில் 829 ரூபாயாகவும், டென்மார்க்கில் 978 ரூபாயாகவும் டீசல் விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பீட்டு விபரங்களை வெளியிட்ட அவர், சர்வதேச நாடுகளின் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விலைகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் விலைகள் குறைவாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.