ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்படும் சுதந்திரமும் உரிமையுமே இந்தியாவின் பாதுகாப்பிற்கு அத்திவாரமாய் அமையும் : இ.கதிர்
ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்படும் சுதந்திரமும் உரிமையுமே இந்தியாவின் பாதுகாப்பிற்கு அத்திவாரமாய் அமையும் என ஜனநாயகப் பேராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடைபெற்ற தமிழர்களுக்கான சமூக நல அறக்கட்டளை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது,

தாயகம் எமது கட்டுப்பாட்டில் இருந்தது
ஒரு அடிப்படை மற்றும் நிரந்தரத் தீர்வுமின்றி அவல நிலைக்குள் வாழந்து கொண்டிருக்கும் எமது ஈழத்தமிழினம், 70 ஆண்டு காலமாக தங்களது உரிமைக்காக ஆயுத ரீதியாகவும், அகிம்சை ரிதியாகவும் போராடுகின்ற இனமாகவே இலங்கையில் வாழ்ந்து வருகின்றது.
எமது மக்களுடைய உரிமை சார்ந்த போராட்டங்கள் ஆயுத ரீதியாக முன்னெடுக்கப்பட்ட போது, எமது மக்கள் தாயகத்தில் பலம்மிக்க ஒரு சக்தியக இருந்தார்கள்.
இலங்கைத் தீவைப் பொருத்தவரையில் 65 சதவீதம் கடற்பரப்பையும் கடல் சார்ந்த நிலத்தையும் கொண்ட எமது தாயகம் எமது கட்டுப்பாட்டில் நிழல் அரசாங்கம் போன்று இருந்தது.
அந்தக் காலத்தில் தெற்காசியப் பிராந்தியத்தில் மிக முக்கியமான பகுதியாகிய எமது தாயகப் பகுதி தமிழர்கள் வசம் பாதுகாப்பு அரணாக இருந்தது. அது தமிழ் மக்களுக்கு மட்டுமலல்லாது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்பிற்கும் ஒரு இரும்புச் சுவராகவே இருந்தது.
ஆயுதப் போராட்டம் திட்டமிட்டு அழிக்கப்பட்ட பின்னர், நாங்கள் எமது பலத்தை எமது தாயக மண்ணில் இழந்து நிற்கின்றோம். உண்மையாக இலங்கை அரசாங்கம் காலம் காலமாக இந்திய அரசாங்கத்தை மிக இலகுவாக ஏமாற்றி வருகின்றது. இதனை இந்தியா நன்கு உணர வேண்டும்.

இந்தியா நீண்டகாலம் மௌனம் காத்தது
இலங்கைத் தமிழர்களுக்கு தீர்வு கிடைத்து விட்டால் இந்தியாவின் மாநிலங்கள் மேலும் பிரிக்கப்பட்டு விடும் என்ற ஒரு பொய்யான செய்தியை இலங்கையின் கொள்கை வகுப்பாளர்கள் இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களுக்குப் பாடமாகப் புகட்டி வருகின்றார்கள். இந்த அடிப்படையிலே தான் தமிழர்களின் உரிமை சார்ந்த விடயத்தில் இந்தியா நீண்டகாலம் மௌனம் காத்தது.
தமிழர்களின் உரிமை சார்ந்த விடயங்கள் இந்தியாவிற்கு பாதமகமாக அமையாது என்ற விடயம் ஈழப் போராட்டம் திட்டமிட்டு நசுக்கப்பட்டதன் பின்னர், வெளிப்படையாகி இலங்கையின் உண்மையான முகத்திரை கிழிக்கப்பட்டது.
இன்று தமிழர்களின் வல்லாதிக்கப் பூமி வல்லரசுகளின் ஆக்கிரமிப்பிற்குள் உள்ளாகும் சூழ்நிலை உருவாகியிருக்கின்றது. இது தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கும் மிக மிகப் பாதகமான விடயமாகவே பார்க்கப்பட வேண்டும்.
ஈழத்தமிழர்களையும் இந்தியாவையும் பிரிக்கின்ற போது, இலங்கை அரசாங்கம் தன்னுடைய தந்திரோபாயமான நகர்வுகளை தெற்காசியப் பரப்பிலே நிறைவேற்றக் கூடிய சாத்தியமான பக்கங்கள் உருவாக்கப்பட்டது. அதில், இலங்கை அரசாங்கம் வெற்றி கண்டது. இந்திய அரசாங்கம் தோல்வி கண்டது.

சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்குள் எமது இனம்
அந்தத் தோல்வியின் அடிப்படையில் தான் இன்று தமிழர்களின் தாயகப் பகுதியான வட கிழக்கில் எமக்கு வேண்டாத அந்நிய சக்தி நாடுகளை களமிறக்கி இந்தியாவின் பூகோள ரீதியான பாதுகாப்பிற்கு அச்சறுத்தலான விடயங்களை இலங்கை அரசாங்கம் உருவாக்கி வருகின்றது.
வடக்கு, கிழக்கு தாயகப் பகுதியில் அந்நிய சக்திகள் அங்கே ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், நிச்சயமாக இந்தியாவின் தமிழ்நாடு மட்டுமல்லாத ஏனைய மாநிலங்களுக்குள்ளும் இந்த நாடுகள் உடுருவிச் சென்று எதிர்வரும் காலங்களில் இந்திய அரசாங்கத்தின் மாநிலங்களைப் பிரித்தாளும் தந்திரோபாயத்தின் வெற்றியாக அமையும்.
எனவே, ஈழத்தமிழர்களுக்கான சுதந்திரம் மற்றும் அவர்களின் உரிமைகள் வழங்கப்படுகின்ற போதுதான் இந்திய அரசாங்கத்திற்கு வேண்டாத அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்பு தடுக்கப்படும். அந்த அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்பு தமிழர் தாயகத்தில் இருந்து என்று வெளியேற்றப்படுகின்றதோ அதுதான் இந்தியாவின் பாதுகாப்பிற்கும் அத்திவாரமாய் அமையும்.
இன்று சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்குள் எமது இனம் சிக்குண்டு தவிக்கின்றது.
2009ஆம் ஆண்டு எமது ஆயதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர், எங்களது தலைவரின் சிந்தனைக்கு அமைவாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவாக நாங்கள் உருவெடுத்திருக்கின்றோம். இறுதிக் கட்டத்தில் எங்களது விடுதலைப் போராட்டம் இனி அரசியற் போராட்டமாக மாற்றப்படும் விடயத்தைத் தலைவர் கூறியிருந்தார்.
அந்த சிந்தனைக்கு அமைவாக ஜனநாயகப் போராளிகள் ஆகிய நாம் இந்த விடயங்களை இந்திய அரசாங்கத்திற்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். ஈழத்தமிழர்களும் இந்திய தேசமும் எதிர்காலத்தில் நட்புறவுச் சமூகமாக இணைந்து தெற்காசியப் பிராந்தியத்தின் பாதுகாப்புக் கருதி நாங்கள் செயற்பட வேண்டும் என்பதை இந்திய அரசாங்கத்திற்கு வலியுறுத்திக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம் என்று தெரிவித்துள்ளார்.
இன்றைய உலக ஒழுங்கை டொனால்ட் ட்ரம்பால் மாற்ற முடியுமா..! 10 மணி நேரம் முன்
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam