இலங்கையில் பொருட்கள் விற்பனை போர்வையில் மோசடி: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மின்சார உபகரணங்கள், தளபாடங்கள், கைக்கடிகாரங்கள், அலங்காரப் பொருட்கள் விற்பனை போர்வையில் பெரிய அளவிலான பிரமிட் திட்ட மோசடியொன்று இடம்பெறுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக நடத்தப்பட்டு வரும் பிரமிட் திட்டத்தில் 50,000 க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பிரபலமான தனியார் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் இந்த பிரமிட் திட்டத்தில், நாடு முழுவதிலுமிருந்து ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

நுணுக்கமான முறையில் மேற்கொள்ளப்பட்ட மோசடி
இந்த மோசடி நுணுக்கமான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத்துறையின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, கோட்டை நீதவானிடம் தெரிவித்துள்ளது.

இந்த பிரமிட் திட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஏழு சந்தேகநபர்களையும் அடுத்த மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த பிரமிட் நிறுவனத்தின் இயக்குநராக செயல்பட்ட நபரை கைது செய்ய விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும், அவர் அவரது வீட்டில் இல்லை என்று நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |