சமூக ஊடகங்கள் வழி வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: தமிழர் பகுதியில் ஒருவர் கைது..!
சமூக ஊடகங்கள் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுத்தருவதாகக் கூறி, பல கோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் நபர் ஒருவரைக் குச்சவெளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினரால் பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட தொடர்ச்சியான முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை நேற்று(19.05.2026) இடம்பெற்றுள்ளது.
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு
கிண்ணியாவை பிறப்பிடமாகக் கொண்ட இவர், குச்சவெளி பிரதேசத்தில் திருமணமாகி, நீண்ட காலமாக கொழும்பில் வசித்து வந்துள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர், சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிகரமான விளம்பரங்களை பதிவிட்டு வந்துள்ளார்.
வெளிநாடுகளில் அதிக சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி, நம்பிய இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல இலட்சம் முதல் கோடிக்கணக்கான ரூபாய் வரை பணத்தைச் சுருட்டியுள்ளது ஆரம்பகட்ட விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.

நீண்ட நாட்களாகியும் வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்காமலும், வாங்கிய பணத்தை திருப்பித் தராமலும் ஏமாற்றி வந்த நிலையிலேயே, பாதிக்கப்பட்டவர்கள் குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்
"கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் தற்போது குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். இவரை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் (CCD) ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, பொதுமக்கள் அனைவருக்கும் பொலிஸார் அவசர விழிப்புணர்வு எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளனர்.

இதன்படி, சமூக ஊடகங்கள் மூலம் கவர்ச்சிகரமான வேலைவாய்ப்பு விளம்பரங்களை வெளியிடும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கும் போது, அரசாங்கத்தின் முறையான அங்கீகாரம் பெற்ற முகவர்களிடம் (SLBFE) மட்டுமே பணப் பரிமாற்றங்களையோ அல்லது சேவைகளையோ பெற்றுக்கொள்ள வேண்டும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.