இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கர்ப்பப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசி
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியா (SII), நாட்டின் முதல் கர்ப்பப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.
இந்த புற்றுநோய் தடுப்பூசி விரைவில் சந்தைக்கு வரும் என நிறுவனமும், இந்திய அரசாங்கமும் அறிவித்துள்ளன.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 2020 ஆம் ஆண்டில் 604,000 கர்ப்பப்பை கழுத்து புற்றுநோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இதன்போது நோயால் 342,000 இறப்புகளும் பதிவாகியுள்ளன.
கர்ப்பப்பை கழுத்து புற்றுநோயானது உலகளவில் பெண்களிடையே நான்காவது பொதுவான புற்றுநோயாகும் என கண்டறியப்பட்டுள்ளது.
சீரம் நிறுவனத்தின் கண்டுபிடிப்பு
மனிதனை தாக்கும் இரண்டு பாப்பிலோமா வைரஸ்(HPV) வகைகளான 16 மற்றும் 18, என்பன குறைந்தது 70% கர்ப்பப்பை கழுத்து புற்றுநோய்களுக்கு காரணமாகின்றன. இவை அண்மையிலேயே கண்டறியப்பட்டுள்ளன.
இந்த தடுப்பூசியை பாடசாலை மாணவிகளுக்கும் செலுத்திக்கொள்ள வேண்டும் என இலங்கை அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.
சீரம் நிறுவனத்தின் கண்டுபிடிப்பு, மேற்குறிப்பிட்ட இரண்டு வைரசுக்களுக்கும் பதிலளிக்கும் என தெரிவித்துள்ளது.
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தடுப்பூசி, கர்ப்பப்பை கழுத்து புற்றுநோயால் ஏற்படும் பெண் இறப்பைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கும் என சீரம் நிறுவன தலைமை நிர்வாகி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி உற்பத்தி
தடுப்பூசி சில மாதங்களுக்குள் முதலில் இந்திய சந்தைக்கும், பின்னர் உலகத்திற்கும் விற்பனைக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.இதன் விலை இந்தியாவில் 200 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை இருக்கலாம்.
சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் நிறுவனம், இந்தியாவில் இரண்டு ஆண்டுகளில் சுமார் 200 மில்லியன் அளவுகளை உற்பத்தி செய்வதை இலக்காகக் கொண்டுள்ளது என பூனவல்லா கூறியுள்ளார்.
தடுப்பூசி 9-14 வயதுடையவர்களுக்கு இரண்டு அளவுகளும், 15 முதல் 26 வயதுக்குட்பட்டவர்களுக்கு மூன்று அளவுகளும் ஊசி மூலம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.