யாழில் களஞ்சிய சாலைக்கு அருகில் தீ பரவல் - விரைந்து செயற்பட்ட தீயணைப்பு படையினர்
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சிய சாலை வளாகத்திற்கு அருகில் உள்ள வெற்றுக்காணிக்குள் திடீர் தீ பரவல் ஏற்பட்ட நிலையில், நீண்ட முயற்சிக்கு பின்னர் தீ அணைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று(27.07.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சிய சாலை வளாகத்திற்கு அருகில் உள்ள வெற்றுக்காணிக்குள் திடீர் தீ பரவல் ஏற்பட்ட நிலையில் கடற்படையினர், தீயணைப்பு படையினர் தீவிரமாக முயற்சி செய்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
பிரதேச சபை விடுத்துள்ள அறிவுறுத்தல்
எரிபொருள் களஞ்சியசாலை வளாகத்திற்கு அருகில் உள்ள வெற்றுக்காணிகள் பராமரிப்பின்றி காணப்படுவதுடன், அந்த காணிகளுக்குள் குப்பைகளும் கொட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது.

இது தொடர்பில் பெற்றோலிய அதிகாரிகளால் வலி.வடக்கு பிரதேச சபைக்கு பல்வேறு தடவைகள் அறிவிக்கப்பட்ட போதிலும் அது தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இன்று(27) தீ பரவல் ஏற்பட்ட போதும், பிரதேச சபைக்கு அறிவித்த போதிலும் பிரதேச சபையினால் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த பகுதிகளில் தீ மூட்ட வேண்டாம் என்ற எச்சரிக்கை பதாகைகளை காட்சிப்படுத்துமாறு பிரதேச சபையின் காங்கேசன்துறை உப அலுவலக பொறுப்பதிகாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

