இலங்கைக்கு சுகாதார தன்னியக்க இயந்திரங்களை வழங்க இந்தியா நிதியுதவி
இலங்கைக்கு 50 மருத்துவக் கியோஸ்க்கள் அல்லது சுகாதார ஏ.டி.எம் இயந்திரங்களை வழங்குவதற்காக 225 மில்லியன் இலங்கை ரூபா வரையிலான மானிய நிதியுதவியை வழங்க இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொழும்பில் நேற்றுமுன்தினம்(11.11.2026) நடைபெற்ற முதலாவது BIMSTEC சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தின் பக்க நிகழ்வாக இடம்பெற்ற இருதரப்புச் சந்திப்பின்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் இரசாயனங்கள், உரங்கள் துறை அமைச்சர் ஸ்ரீ ஜகத் பிரகாஷ் நட்டா மற்றும் இலங்கையின் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருக்கிடையில் இந்த இருதரப்புச் சந்திப்பு நடைபெற்றது.
நிதியுதவி
இந்த மருத்துவக் கியோஸ்க்கள் அல்லது சுகாதார ஏ.டி.எம். இயந்திரங்கள் மூலம், குறிப்பாக கிராமப்புற மற்றும் அடிப்படை சுகாதார வசதிகள் போதியளவில் கிடைக்கப்பெறாத பிரதேசங்களில், அத்தியாவசிய நோயறிதல் மற்றும் மருத்துவப் பரிசோதனை வசதிகளுக்கான அணுகலை மேம்படுத்தி, ஆரம்ப சுகாதார சேவைகளை வலுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கு இவை உதவுவதுடன், அரசாங்க வைத்தியசாலைகள் மீதான நோயாளர்களின் சுமையைக் குறைப்பதற்கும் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.