கிண்ணியாவில் கோர விபத்து : இளைஞர் படுகாயம்
கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட பிரதான வீதியில் இன்று(30.01.2026) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பியதோடு, கால்நடை ஒன்றும் பலத்த காயத்திற்குள்ளாகியுள்ளது.
கிண்ணியா வீதி, சம்பத் வங்கிக்கு முன்னால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அதிவேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியின் குறுக்கே நின்ற கட்டாக்காலி மாடுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.
இளைஞருக்கு பலத்த காயம்
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய இளைஞர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் உயிர் தப்பியுள்ளார்.
எனினும், விபத்துக்குள்ளான மாட்டின் கால் ஒன்று முறிவடைந்துள்ளதோடு, மோட்டார் சைக்கிளும் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளது.

அண்மைக்காலமாக கிண்ணியா நகரப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதிகளில் மாடுகளின் நடமாட்டம் மீண்டும் அதிகரித்துள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இரவு வேளைகளில் போதிய வெளிச்சமின்மை மற்றும் வீதிகளின் நடுவே மாடுகள் நிற்பதால் வாகனச் சாரதிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொள்வதுடன், அடிக்கடி இவ்வாறான விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன.
இரவு நேரங்களில் வீதிப் பாதுகாப்பு
வீதிகளில் மாடுகளை விடும் உரிமையாளர்களுக்கு எதிராக கிண்ணியா நகர சபை தவிசாளரினால் ஏற்கனவே பலமுறை கடுமையான அறிவுறுத்தல்களும், எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், கால்நடை உரிமையாளர்கள் பொறுப்பற்ற ரீதியில் மாடுகளை வீதிகளில் உலாவ விடுவதால் நகர சபையின் அறிவித்தல்கள் பயனற்றுப் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இவ்வாறான விபத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாயின், கிண்ணியா நகர சபை முறையான மற்றும் நிரந்தரமான தீர்வு ஒன்றினைப் பெற்றுத்தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, வீதிகளில் திரியும் மாடுகளைக் கைப்பற்றி உரிமையாளர்களுக்குக் கடுமையான அபராதம் விதித்தல், கால்நடை வளர்ப்போர் அவற்றைத் தத்தமது இடங்களில் கட்டி வளர்ப்பதை உறுதி செய்தல், இரவு நேரங்களில் வீதிப் பாதுகாப்பை பலப்படுத்துதல் போன்ற விடயங்களில் நகர சபை உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
வீட்டில் ஆயிரம் பிரச்சனை, ஆனால் ரொமான்ஸ் Moodல் கதிர்- ராஜி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ரொமான்டிக் புரொமோ Cineulagam