பிரபல நடிகை மற்றும் அவரது கணவரை கைது செய்ய நடவடிக்கை
இலங்கையில் பிரபல நடிகை மற்றும் அவரது கணவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
35 லட்சம் ரூபாய் பண மோசடி தொடர்பாக அவர்கள் கைது செய்யப்படவுள்ளனர். பாணந்துறை பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையின் பணிப்பாளரே இந்த மோசடியில் சிக்கியுள்ளார்.
அதே மருத்துவமனையில் உள்ள மருத்துவர் இந்த நடிகை மற்றும் அவரது கணவரை, பணிப்பாளருக்கு அறிமுகப்படுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் இருவரும், பயன்படுத்திய சிறிய கண்ணாடி போத்தல்களை சுத்தம் செய்து ஏற்றுமதி செய்யும் தொழிலை முன்னெடுப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு
முறைப்பாட்டாளரான பணிப்பாளரிடமிருந்து, வணிகத்திற்கான மூலப்பொருட்களை வாங்குவதற்காக 3,611,248 ரூபாய் பெற்றுக் கொண்டு அதைத் திருப்பித் தராமை குறித்து, கடந்த 29 ஆம் திகதி பாணந்துறை சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பணம் 2023ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 08ஆம் திகதி முதல் செப்டம்பர் 05ஆம் திகதி வரை அவ்வப்போது பெறப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
அதிகமான பணம்
இந்த மோசடியில் தொடர்புடைய நடிகை, வெளிநாடுகளுக்கு மக்களை அனுப்புவதாக கூறி 30 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் பெற்று ஏமாற்றியுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் ஏற்கனவே தேடப்பட்டு வந்த நபராகும்.
எனினும் அவர் வீட்டை விட்டு தப்பியோடி தலைமறைவாகி, நீதிமன்றத்தில் சரணடைந்து, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். பின்னர் பிணையில் விடுதலையாகியுள்ளார்.
இந்த மோசடி வழக்கு தற்போது கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. அவர் பொது அரசியல் மேடைக்கு வந்த பிரபல கதாப்பாத்திரம் என தெரிவிக்கப்படுகிறது.



