கொழும்பில் போலி பொலிஸ் அதிகாரியிடம் பணத்தை இழந்த மக்கள்
கொழும்பு, மருதானை ரயில் நிலையத்தில் பொலிஸ் அதிகாரி போல் நடித்து பயணிகளிடம் பணம் கொள்ளையடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த போலி பொலிஸ் அதிகாரி மருதானை ரயில் நிலையத்தின் 1,2,3,4 மற்றும் 5வது தளங்களில் அடையாள அட்டைகள் மற்றும் பணப்பைகளை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அடையாள அட்டைகளை திருப்பி வழங்கிய பின்னர் பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவம் சிறிது காலமாக நடந்து வருவதாகவும் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போலி பொலிஸ்
நேற்று மதியம் 12.30 மணியளவில், போலி பொலிஸ் அதிகாரி, முதலாவது தளத்தின் ஒரு மூலையில் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்த ஒருவரை அணுகி, தான் பொலிஸ் அதிகாரி எனவும், ரயில் தடங்களில் புகைபிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
இந்த விடயம் குறித்து தெரியுமா என வினவியவர் பயணியை மிரட்டி 12,000 ரூபாய் மற்றும் அவரது அடையாள அட்டையை எடுத்துச் சென்றுள்ளார்.
பின்னர், சந்தேக நபர் மற்றொரு ரயிலில் ஏறி, உரிய நபரிடம அடையாள அட்டையை திருப்பி கொடுத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். பின்னர், இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்த நபர் மருதானை ரயில்வே பாதுகாப்பு பிரிவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
சிசிடிவி கேமரா
உடனடியாக சிசிடிவி கேமராவை வைத்து நடவடிக்கையை மேற்கொண்ட ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள், போலி பொலிஸ் அதிகாரியை ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
பின்னர், அவரை சோதனை செய்தபோது, திருடப்பட்ட 12,000 ரூபாய் மீட்கப்பட்டது. சந்தேக நபர் கொழும்பு சங்கராஜ மாவத்தையில் வசிப்பவர் எனவும் அவருக்கு சுமார் 45 வயது இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.
ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மருதானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.





அமெரிக்காவுடன் மோதல்... எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை குறிவைக்கும் சீனா News Lankasri
