தேசிய சாதனை மாணவர்களை முத்தையன்கட்டு இடதுகரை கிராமமே சேர்ந்து வாழ்த்திய நிகழ்வு
இந்த ஆண்டு அகில இலங்கை கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் தேசிய சாதனை படைத்த முத்தையன்கட்டு கிராம மாணவர்களை கிராம மக்கள் ஒன்றிணைந்து கௌரவிக்கும் நிகழ்வு முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கௌரவிப்பு நிகழ்வு, நேற்றையதினம் (28.07.2024) முத்தையன்கட்டு ஜீவநகர் பகுதியில் மிகவும் விமர்சையாக நடைபெற்றுள்ளது.
2024ஆம் ஆண்டு அகில இலங்கை கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் 3000m ஐ முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன்கட்டு இடதுகரை அ.த.க பாடசாலையின் ஜெயகாந்தன் விதுஷன் 9நிமிடம் 2 செக்கனில் ஓடிமுடித்து முதலாம் இடத்தையும் அதே பாடசாலையை சேர்ந்த மாரிமுத்து நிலவன் 9நிமிடம் 32 செக்கனில் ஓடிமுடித்து 5ஆம் இடத்தையும் சந்திரமோகன் இசைப்பிரியன் 9நிமிடம் 47 செக்கனில் ஓடி முடித்து 8ஆம் இடத்தையும் பெற்று வரலாற்று சாதனையை நிலைநாட்டி இருந்தனர்.
மாணவர்களுக்கு கௌரவிப்பு
இதனையடுத்தே, குறித்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் பிரதமர் விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கலந்துகொண்டார்.
அத்துடன், தாய் தமிழ் பேரவையின் நிறுவனர் ரூபன் முன்னாள் ஒட்டுசுட்டான் பிரதேச சபை உறுப்பினர் சீலன்,
முத்தையன்கட்டு இடது கரை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர், பயிற்சியாளர், ஆசிரியர்கள், மாணவர்கள்,
பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், ஜீவநகர் கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டு சாதனை படைத்த மாணவர்களை கௌரவித்து பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
சாள்ஸ் நிர்மலநாதனின் கருத்து
இந்த கௌரவிப்பு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பேசுகையில்,
“மிகவும் பின்தங்கிய முத்தையன்கட்டு ஜீவநகர் கிராமத்தில் இருந்து பல்வேறுபட்ட இடர்களையும் சந்தித்து தேசிய ரீதியில் சாதனை படைப்பது மிகவும் எளிதானதல்ல.
இந்த சாதனைக்கு முதலில் பாடசாலை அதிபருக்கு நன்றி சொல்ல வேண்டும். மேலும், பயிற்றுவித்த பயிற்சியாளரினதும் பெற்றோர்களதும் ஒத்துழைப்பின்றி இவர்களால் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்க முடியாது.
இந்த சாதனைகளை தொடர்ச்சியாக தக்க வைக்க அனைவரும் பாடுபட வேண்டும். அதுவே எதிர்கால சந்ததிக்கு நாம் காட்டும் வழியாக இருக்கும். இந்த தேசிய சாதனைகள் படைத்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |