மரியுபோலில் மிகப்பெரிய போர்க்குற்றம் இடம்பெறுவதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு
உக்ரைன் - மரியுபோலில் மிகப்பெரிய போர்க் குற்றம் நடைபெறுவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைப் பிரிவின் தலைவர் ஜோசப் போரெல் தெரிவித்துள்ளார்.
ரஷ்யப் படையினர் மூர்க்கத்தனமாகக் குண்டுவீசி எல்லாவற்றையும் அழித்து, கொலை செய்தும் வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா மீது இன்னும் கூடுதல் பொருளாதாரத் தடைகள் விதிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் நேற்று பிரஸ்ஸல்ஸில் ஒன்று கூடினர். அங்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவிடம் 40 சதவீத எரிவாயுவை நம்பியுள்ளமையால் ரஷ்ய எண்ணெய்யைக் குறிவைப்பது ஐரோப்பிய ஒன்றியத்திற்குக் கடினமான தேர்வாகும்.
உக்ரைன் - ரஷ்யா இடையே போர் தொடங்கியதிலிருந்து ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், மூத்த அமைச்சர்கள், தொழிலதிபர்கள் உட்பட 877 பேர் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
இதனால் புதிதாக வேறு பொருளாதாரத் தடைகளை விதிப்பதால் ரஷ்யாவின் எரிவாயு கிடைக்காமல் போகும் நிலை காணப்படுகின்றமையால் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் தயங்கிவருகிறது.
இருப்பினும் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை முற்றிலும் தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.