அணு உலையை ரஷ்யா தாக்கினால் ஐரோப்பா பாரிய அழிவை சந்திக்கும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை (VIDEO)
உக்ரைனில் உள்ள அணுமின் நிலையத்தை எறிகணைத் தாக்குதலுக்குப் பின்னர் ரஷ்யா தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ள நிலையில், அணு ஆயுத பயங்கரவாதத்தில் ரஷ்யா ஈடுபட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் அணுமின் நிலையப் பகுதியில் எறிகணை தாக்குதல்களை நடத்தியுள்ளதன் மூலம் முழுமையான ஐரோப்பிய கண்டத்தின் பாதுகாப்பையும் ரஷ்யா ஆபத்தில் தள்ளுவதாக உலகத் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு மின் உற்பத்தி நிலையமான ஸப்போரிஷியாவிற்கு அருகில் ரஷ்யா மேற்கொண்ட எறிகணை தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டது. முதலில் தீயணைப்பு வீரர்கள் அணுக முடியாததாக தீ விபத்து ஏற்பட்ட பகுதி இருந்த போதிலும் பின்னர் தீயணைப்பு வீரர்கள் அந்த இடத்தை அணுகி, தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த நிரலில் அணு உலை வளாகத்தை சூழ பல மணி நேரம் மேற்கொள்ளப்பட்டுவந்த தொடர் குண்டு வீச்சுக்குப் பின்னர் தற்போது அங்கு மோதல் நிறுத்தப்பட்டுள்ளதாக எனர்கோடார் நகர மேயர் டிமிட்ரோ ஓர்லோவ் கூறியுள்ளார்.
அணு உலை வளாகத்தில் உள்ள ஒரு கட்டடத்தின் மூன்று, நான்கு, ஐந்தாவது தளங்களில் இந்த தாக்குதலால் தீப்பற்றி எரிந்ததாக உக்ரைனின் அவசரகால சேவை அதிகாரிகள் கூறினர்.
எனினும் அணு உலையில் ஏற்பட்ட தீயை அணைத்துவிட்டதாகவும் இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் உக்ரைனின் அவசரகால சேவை அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை அணு மின் நிலையத்தை அண்மித்ததாக ரஷ்யா எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ள நிலையில், உக்ரைன் ஜனாதிபதி வெலெடிமிர் ஷெலென்ஸ்கி அவசர உதவியை கோரியுள்ளார்.
தலைநகர் கீவ்வில் இருந்து கருத்து வெளியிட்ட ஷெலென்ஸ்கி, அணுசக்தி பேரழிவு ஏற்படக்கூடும் என எச்சரித்தார். ஐரோப்பியர்களே, தயவுசெய்து எழுந்திருங்கள் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சர்வதேச அணுசக்தி முகவர் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ரஃபேல் க்ரோஸி இருவரும் வெலெடிமீர் ஷெலென்ஸ்கியின் தலைமைக் குழுவுடன் கலந்துரையாடியுள்ளனர்.
அணு உலைகள் தாக்கப்பட்டால் கடுமையான ஆபத்துகள் ஏற்படும் என்று எச்சரித்து, அணு உலைக்கு அருகில் படைகளைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு சர்வதேச அணுசக்தி முகவர் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
எவ்வாறாயினும் அணுமின் திட்டத்தில் உள்ள அணு உலைகள் பாதுகாப்பாக உள்ளதாக அந்த திட்டத்தின் பணிப்பாளர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் அணு உலை அமைந்துள்ள பகுதியில் இராணுவ நடவடிக்கையை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை ரஷ்யாவின் "பயங்கரமான தாக்குதல்கள்" "உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்" என கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் கோரியுள்ளார்.
இதேவேளை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் ஐரோப்பா முழுவதிலும் பாதுகாப்பிற்கு நேரடியாக அச்சுறுத்தலாக இருக்கலாம் என பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் கூறியுள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதியுடனான தொலைபேசி கலந்துரையாடலில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
தற்போதுள்ள நிலைமை மிகவும் கரிசனை அளிக்கும் ஒன்றெனவும் ரஷ்யா உடனடியாக அணு மின் நிலையம் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் மற்றும் அணு உலைகள் அவசர சேவைகளுக்கு தடையின்றி அணுகலை அனுமதிக்க வேண்டும் என்ற விடயத்தில் இரண்டு நாட்டு தலைவர்களும் இணக்கம் கண்டுள்ளனர்.
மேலும், நிலைமை மேலும் மோசமடையாமல் இருக்க பிரித்தானியா தம்மால் முடிந்த அனைத்தையும் செய்யும் எனவும் பிரித்தானியப் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் யுத்த நிறுத்தம் உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பதையும் இரண்டு நாட்டுத் தலைவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
1986 ஆம் ஆண்டு செர்னோபில் பகுதியில் ஏற்பட்டதை போன்ற மிக மோசமான அணு பேரழிவை மீண்டும் அரங்கேற்ற ரஷ்யா விரும்புவதாக உக்ரைன் ஜனாதிபதி வெலெடிமீர் ஷெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
அணு உலையில் வெடிப்பு ஏற்படும் பட்சத்தில் அது அனைத்தின் முடிவாகவும் ஐரோப்பாவின் முடிவாகவும் இருக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.