ஐரோப்பாவில் விமான எரிபொருள் கையிருப்பு குறித்து வெளியான தகவல்
ஐரோப்பாவில் இன்னும் சுமார் ஆறு வாரங்களுக்கு மட்டுமே விமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக சர்வதேச எரிசக்தி முகவரகத்தின் (IEA) தலைவர் பாத்திஹ் பிரோல் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ளதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் விநியோகத்திலுள்ள இந்தத் தடை நீடித்தால், விரைவில் பெருமளவிலான விமான சேவைகள் இரத்து செய்யப்பட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிசக்தி நெருக்கடி
ஹோர்முஸ் நீரிணையின் முடக்கம் காரணமாக உலகம் இதுவரை சந்தித்திராத மிக மோசமான எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக அவர் அளித்த பேட்டியில் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்த நெருக்கடியானது உலகப் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ள அவர், எரிபொருள் பற்றாக்குறையால் சர்வதேச அளவில் பெற்றோல், எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணங்கள் பெருமளவு அதிகரிக்கக்கூடும் என எச்சரித்துள்ளார்.
ஹோர்முஸ் கடற்பரப்பின் ஓமன் பக்கத்திலிருந்து தாக்குதலின்றி வெளியேற அனுமதிக்கும் திட்டம்! வெளிவந்துள்ள தகவல்
பொருளாதார வளர்ச்சி
"முன்பு 'டயர் ஸ்ட்ரெய்ட்ஸ்'என்ற இசைக்குழு இருந்தது, ஆனால் இப்போது ஹோர்முஸ் நீரிணை உண்மையாகவே ஒரு 'அபாயகரமான நீரிணையாக' (Dire Strait) மாறியுள்ளது" என அவர் ஒப்பிட்டுக் கூறியுள்ளார்.

இந்தப் போர்ச் சூழல் நீடிக்கும் ஒவ்வொரு நாளும் உலகப் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், பணவீக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் உயரும் என்றும் அவர் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.