தமிழ் மக்கள் பொதுச்சபை ஒரு புதிய வரலாற்றுத் தொடக்கம்
உன்னை நீ கைவிட்டுவிட்டால் உன்னை கடவுளாலும் காப்பாற்ற முடியாது ஈழத் தமிழர்கள் தம்மை பலப்படுத்தாமல் தம்மை ஐக்கியப்படுத்தாமல் தமது விடுதலைக்கான பயணத்தை ஆரம்பிக்கவும் முடியாது, தொடரவும் முடியாது.
தமிழ் மக்கள் தமது பொது எதிரியுடன் போராடுவதற்கு தம்மை தகவமைத்துக் கொள்ளவேண்டும். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் தம்மை ஐக்கியப்படுத்துவதற்கான முதற்கட்டம் இவ்வாரம் திங்கட்கிழமை 22ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நிறைவேறி இருக்கிறது.
அதுதான் சிதறிக்கிடந்த தமிழ்தேசிய அரசியல் கட்சிகளும் தமிழ் மக்கள் பொதுச்சபையும் இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டுள்ளமை.
முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் முடக்கப்பட்டதன் பின்னர் தமிழ் தேசிய அரசியலில் ஒரு தலைமைத்துவ வெற்றிடம் ஏற்பட்டு விட்டது.
பெரும் தோல்விகளை சந்தித்த தமிழ் சமூகத்தினால் கடந்த 15 ஆண்டுகளாக அந்தத் தலைமத்துவ வெற்றிடத்தை இட்டுநிரப்ப முடியவில்லை என்பது துயரகரமான ஒரு வரலாறுதான்.
விடுதலை போராட்டம்
தமிழீழ விடுதலைப் போராட்டம் விட்டுச்சென்ற அல்லது முள்ளிவாய்க்கால் தந்த பேரவலத்திற்கும் சொல்லொணா துன்பங்களுக்கு மத்தியிலும் முள்ளிவாய்க்கால் முடிவு சில வரப் பிரசாதங்களை தந்துவிட்டு சென்றது. அது இனப்படுகொலை என்ற ஒரு வரத்தை எதிர்மறையாகத் தந்துவிட்டு சென்றது.
ஆனால் அதை வைத்துக் கொண்டுங்கூட தமிழ் மிதவாத அரசியல் தலைமைகளினால் ஒரு கட்டத்தை நோக்கி நகர முடியாது போனமை மட்டுமல்ல தமிழ் சமூகம் பல்வேறு தரப்புகளாக தம்முள் பிளவுபட்டு சிதறுண்டு சீல்பிடித்து சீரழியக் காரணமாகவும் இருந்து விட்டனர்.
இந்த நிலையில் தமிழ் மக்களுக்கான ஒரு தலைமைத்துவத்தை அல்லது ஒரு ஒற்றை தலைமையை உருவாக்குவது என்பது மிகக் கடினமானது. ஒரு இராணுவத் தோல்விக்குப்பின், பெரும் துயரத்துக்குப்பின், நிச்சயமற்ற விரக்தி அடைந்த மனநிலையில் இருந்து கொண்டு தமிழ் மக்களால் ஒரு தலைமையை கட்டி அமைக்கவே முன்நிறுத்தவோ முடியவில்லை என்பதும் உண்மைதான்.
அதேநேரத்தில் ஒரு ஒன்றித்த ஒற்றைத் தலைமையை தமிழ் மக்களால் முன்னிறுத்த முடியாது என்பதும் உண்மைதான். இந்நிலையில் ஈழத்தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டம் அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கு ஒரு அரசியல் இயக்கத்தை தானும் கட்டியமைக்க முடியாமல் போய்விட்டது.
ஒரு இயக்கத்தை கட்டியமைக்க வேண்டுமானால் ஒரு தலைமை வேண்டும். அத்தகைய நம்பிக்கையான விட்டுக்கொடுப்பற்ற உறுதியான ஒரு தலைமை யார் ? எது? என்பதை இனங்காட்ட முடியாத ஒரு அரசியல் சூழமைவு தமிழ் அரசியல் பரப்பில் தோன்றியிருந்தது.
எனவே, தமிழ் மக்கள் தரப்பில் உடனடியாக ஒரு ஒற்றைத் தலைமையை முன்னிறுத்த முடியாத சூழ்நிலையில் கூட்டுத் தலைமைகளை உருவாக்குவதே சாத்தியம் என்பதை அரச அறிவியல் ரீதியில் உணர்ந்ததன் வெளிப்பாடு தமிழ் மக்கள் சிவில் சமூகம் முன்வந்து தமிழ் மக்களை ஒருங்கிணைப்பதற்கான, ஒரு ஒருங்கிணைவை ஏற்படுத்த வல்ல செயற்பாடுகளில் இறங்கியது.
கூட்டுத் தலைமைத்துவம்
தமிழ் மக்கள் எப்போதும் தமது தோல்விகளை ஏற்றுக்கொள்ள தயார் இல்லாத ஒரு மக்கள் கூட்டம். அவர்கள் தோல்வி அடைந்தாலும் தொடர்ந்து மீள் எழுவதற்காக மீண்டும் மீண்டும் புதிய புதிய இயக்கங்களை, கட்டமைப்புகளை உருவாக்கிச் செயல்பட வல்லவர்கள். தோல்விகளைக் கண்டு துவளாத விடாமுயற்சியுள்ள ஒரு சமூகம். வென்றவன் தோல்விகளைக் கண்டு இடை நடுவில் நின்றது கிடையாது.
தோள்களைக் கண்டு துவண்டவன் வென்றது கிடையாது என்ற தத்துவவியல் பண்பாட்டை கொண்ட ஈழத்தமிழினம் மீண்டெழுவதற்கான முதலடியை எடுத்துவைக்க 15 ஆண்டுகள் தேவைப்பட்டமை என்பது நீண்ட காலம்தான்.
இத்தகைய ஒரு சமூகப் பின்னணியை கொண்ட தமிழ்த் தேசிய அரசியல் இன்றைய மாறி வருகின்ற உலகச் சூழலுக்கும், பிராந்திய அரசியலுக்கும் ஏற்ற வகையில் தமிழ் மக்கள் தனி இயக்கங்களை கட்டுவதையோ அமைப்புகளையோ கட்ட முயல்வதும் இன்றைய காலத்துக்கு பொருத்தமற்றது.
அதற்கான வாய்ப்பக்களும் தற்போது இல்லை. எனவே இருக்கின்ற குடிசார் சமூக அமைப்புகளை ஒருங்கிணைத்து ஒன்றிணைந்த கூட்டுத் தலைமைத்துவத்தின் கீழ் தமிழ் மக்களை வழிநடத்துவதுதான் இன்றைய உலக, உள்நாட்டு, சர்வதேச அரசியலில் பொருத்தப்பாடானது என்பதனை தமிழ் அறிவியல் சமூகம் உணர்ந்துள்ளது.
அதனை இப்போது செயற்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறது என்பது தான் தமிழ் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததும் கவனத்திற்கு கொள்ளத்தக்கதுமாகும். இத்தகைய ஒரு அரசியல் சூழமைவில் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் ஒரு களப்பயிற்சியாக, ஆடுகளமாக அமைந்தது.
சிவில் சமூக அமைப்புகள்
அந்த அடிப்படையில் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துச் சொல்லவும், தமிழ் மக்களை ஒருங்கிணைக்கவும், தமிழ் தேசிய அடிக்கட்டுமானங்களை கட்டவும் ஏற்ற வகையில் இந்தத் தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
அந்த முடிவினை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழர் தாயகத்தில் செயல்படுகின்ற பல வகைப்பட்ட 96 சிவில் சமூக அமைப்புகளை ஒருங்கிணைத்து 100இற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட "தமிழ் மக்கள் பொதுச் சபை" (Tamil people's general assembly) என்ற சிவில் சமூக அமைப்பு உருவாக்கப்பட்டது.
இவ்வாறு உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச்சபையில் 25 உறுப்பினர்களை இணைப்பாளர்களாகக் கொண்ட நிர்வாக குழு வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கே இந்த 25 நிர்வாக குழுவினரும் தமிழ் மக்கள் பொதுச்சபையின் இணைப்பாளர்கள் என்று குறிப்பிடப்பட்டாலும் உண்மையில் அவர்கள் தமிழ் மக்கள் பொதுச்சபையின் தலைவர்கள் என்றுதான் கருதப்பட வேண்டும்.
அப்படியானால் தமிழ் மக்கள் பொதுச்சபை இப்போது 25 கூட்டு தலைமைகளை கொண்ட ஒரு சிவில் சமூக அமைப்பாக உருத்திரண்டு இருக்கிறது என்று சொல்வதே பொருத்தமானது. அத்தகைய தமிழ் மக்கள் பொதுச் சபை தொடர்ந்து எதிர்காலத்தில் நிலையாக இயங்குவதற்கான பொருத்தப்பாடு உடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில் 25 இணைப்பாளர்களும்,
1) கருத்துருவாக்கம்
2) கருத்து பரவலாக்கம்
3) தொடர்பாடல்
4) நிதிக் கையாளுகை
5) நிர்வாக ஒழுங்கமைப்பு என ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டு தொழிற்படுவர்.
விடுதலைக்கான தாகம்
இவ்வாறு உருவாக்கப்பட்ட இந்த 25 இணைப்பாளர்களும் தமிழர் தாயகத்தின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றனர். எனினும் எதிர்காலத்தில் தமிழ் பொதுச் சபையின் வளர்ச்சி அனைத்து தமிழர் தாயகப் பகுதிகளையும் ஒழுங்காகவும் சீராகவும் பிரதிநிதித்துவப் படுத்தப்படக்கூடிய வகையில் ஒழுங்கமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவில் சமூக அமைப்புக்களின் ஒன்றிணைப்பான தமிழ் மக்கள் பொதுச்சபை கடந்த மாதம் வவுனியாவில் ஒன்று கூடி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி போட்டியிடுவதன் மூலம் தமிழ் மக்களுடைய வாக்கை ஒன்று திரட்டுவதும், தமிழ் மக்களை ஐக்கியப்படுத்துவதும், தமிழ் மக்கள் தமது விடுதலைக்கான தாகத்துடன் தொடர்ந்து இருக்கிறார்கள் என்பதையும் வெளிக்காட்டுவதற்காக ஒரு முதல் நிலை வேலை திட்டத்தை முன்மொழிந்து நிறைவேற்றினார்கள்.
அதன் தொடர்ச்சியாக அரசியல் கட்சிகளுடன் தமிழ் தேசியம் பேசுகின்ற அரசியல் கட்சிகளுடன் பேசி ஏழு கட்சிகள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றார்கள்.
இந்த இணக்கப்பாட்டின் இன்னும் ஒரு கட்ட வளர்ச்சியாக தமிழ் தேசிய அரசியல் கட்சிகளும் தமிழ் மக்கள் பொதுச்சபையும் இணைந்து கூட்டாக ஒரு புரிந்துணர்வு உடன்பாட்டிற்கு வந்திருக்கிறார்கள்.
இலங்கை தீவில் சிங்கள தலைமைகளுடன் தமிழ் தலைமைகள் பல்வேறு வகையான ஒப்பந்தங்களையும் வாக்குறுதிகளையும் பெற்றும் எதுவும் சிங்கள தலைவர்களால் நடைமுறைப்படுத்தப்படாமல் தலைமைகள் ஏமாற்றப்பட்டதன் அனுபவங்களின் அடிப்படையிலும், இலங்கையின் 2024 அரசுத்தலைவர் தேர்தலைத் தமிழ் மக்கள் தரப்பில் செயல்முனைப்புடன் எதிர்கொள்ள வேண்டிய அரசியல் தேவையும் அவசியமும் முக்கியத்துவமும் கருதப்பட வேண்டும்.
இந்நிலையில், இன்றைய அரசியல் செல் நெறியில் தமிழ்த் தேசத்தின் மக்களை ஒன்றுபடுத்துவது என்னும் பிரதான நோக்கத்தோடு தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை தமிழ் தேசியக் கட்சிகளும் தமிழ் மக்கள் பொதுச்சபையும் இணைந்து செயல்முனைப்புடன் தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்கும் நோக்கில் ஒரு பொதுக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொள்வதென்றும் முடிவுக்கு இரு தரப்பினரும் முன் வந்து கைச்சாத்திட்டுள்ளனர்.
தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு
இதன்பிரகாரம் சம தரப்புக்கள் என்னும் வகையில், 7 தமிழ்த் தேசிய கட்சிகளும், தமிழ் மக்கள் பொதுச்சபையும் இணைந்து 22.07.2024 அன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் பின்வரும் அடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
1.தமிழ்த் தேசியக் கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகியவை இவ்வுடன்படிக்கையில் சம தரப்பினர் என்னும் வகையில், இரு தரப்பினரின் இணைவில், உருவாக்கப்படும் இக்கட்டமைப்பு “தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு” என அழைக்கப்படும்.
2.இவ்வுடன்படிக்கையின் பிரகாரம் உருவாக்கப்படும் “தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு” எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை, இலங்கையின் அரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் நிராகரித்து தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தும் தேர்தலாக கையாளும் வகையில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதெனத் தீர்மானித்துள்ளது.
3. தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பானது தமிழ்ப் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுத்தல், தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரித்தல், நிதி தொடர்பான விடயங்கள், பரப்புரைகளை முன்னெடுத்தல் போன்ற, அனைத்து அவசியமான செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்கும் நிர்வகிப்பதற்குமான, துணைக் குழுக்களை தேவைக்கேற்ப உருவாக்கும் அதிகாரங்களை கொண்டிருக்கும்.
4. தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பால் பொதுவேட்பாளரை நிறுத்தும் நடவடிக்கைக்காக உருவாக்கப்படும் குறித்த துணைக் குழுக்கள் மற்றும் ஏனைய துணைக் கட்டமைப்புக்கள் அனைத்திலும் தமிழ்த் தேசியக் கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகியவை சமதரப்பாகப் பங்குபற்றும்.
5.தமிழ்ப் பொதுவேட்பாளராக நிறுத்தப்படுபவரும் அவருக்கான தேர்தல் சின்னமும் தமிழ்ப் பொது நிலைப்பாட்டுக்கான ஒரு குறியீடாக மட்டுமே கருதப்படுதல் வேண்டும்.
புரிந்துணர்வு உடன்படிக்கை
6. தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பானது பொது வேட்பாளராகத் தெரிந்தெடுக்கப்படுபவருடனும், அவர் எந்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் சார்பில் உத்தியோகபூர்வமாக நிறுத்தப்படுகின்றாரோ அந்த நபருடனும் அந்தக் கட்சியுடனும் அவசியமானதும் உகந்ததுமான, உடன்படிக்கையைத் தனித்தனியே, நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்.
7. தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகிய இரு தரப்பும், ஒரு பொதுக் கட்டமைப்பாக செயற்படுபவர்கள் என்னும் அடிப்படையில் கூட்டுப் பொறுப்புடையவர்கள் என்பதில் இணக்கம் காணப்படுவதுடன், இதற்கான வழிகாட்டல் நெறிமுறை ஒன்றை உருவாக்கிக் கொள்வது என்றும் இணக்கம் காணப்படுகின்றது.
8. தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உடன்பாடுள்ள ஏனைய கட்சிகள் தமிழ்ப் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு, பொதுக் கட்டமைப்புடன் இணைந்து பயணிக்க முன்வரும் போது, அவர்களை உள்வாங்கிக் கொள்வதென்றும் இணக்கம் காணப்படுகின்றது.
9. தமிழ்த் தேசிய இனத்தின் நீண்டகால அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் குறிக்கோளுடன் தொடர்ந்து செயற்படுவதென இருதரப்பும் மேலும் இணங்கிக் கொள்கின்றனர்.
இப்புரிந்துணர்வு உடன்படிக்கையானது அறிவியல் சமூகமும், குடிமக்கள் சமூகமும், அரசியல் சமூகமும் ஒரு குடைக்குள் ஒற்றுமையாக நின்று செயல்படுவதற்கான ஒரு அடித்தளத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச்சபை இணைந்து ஒரு ஒப்பந்தத்திற்கு செல்வதும் ஒரு கூட்டிணைவாக செயல்படுவதற்கு முன்வந்தமை என்பதும் தமிழர் அரசியல் வரலாற்றில் முதற்தடவையானதும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகவும் வரலாற்றில் பதிவாகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 30 July, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.