ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அமெரிக்க FBI விசாரணையில் உறுதியான விடயம் - வெளிவந்துள்ள தகவல்
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் என்பது அமெரிக்காவின் எப்.பி.ஐ (FBI) விசாரணைகள் மிகத் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன், இது ஐ.எஸ்.ஐ.எஸ். கொள்கையினால் வழிநடத்தப்பட்ட ஒரு செயல் என்பதும் குறித்த விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் இன்று (12.03.2026) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
விசாரணைகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் உள்ள சிலர் தற்போது முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட வேடிக்கையான விடயங்கள். இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலில் ஐந்து அமெரிக்கப் பிரஜைகள் கொல்லப்பட்டதன் காரணமாக, அமெரிக்க சட்டதிட்டங்களுக்கு அமைவாக அந்நாட்டு நீதிமன்றத்தில் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, FBI அமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட விரிவான சத்தியக் கடதாசியானது, தாக்குதல் நடத்தப்பட்ட இடங்கள், தாக்குதல்தாரிகளின் தொலைபேசி தரவுகள், டிஜிட்டல் சாதனங்கள், வீடியோக்கள் மற்றும் பயிற்சி முறைகள் போன்ற ஆழமான மூலாதாரங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதாகும்.
அந்த அறிக்கையில், சஹ்ரான் ஹாஷிம் என்பவரே இந்தத் தாக்குதலின் பிரதான மூளையாகவும் தலைவராகவும் செயற்பட்டுள்ளார் என்பது ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இலங்கையில் "ISIS-Sri Lanka" என்ற பெயரில் ஒரு பயங்கரவாத அமைப்பு இயங்கியதையும், சஹ்ரான் ஹாஷிம் அதன் சுய-பிரகடனத் தலைவராக இருந்ததையும் அமெரிக்க புலனாய்வுத் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
தாக்குதல்
இவர்கள் ஈராக் மற்றும் சிரியாவில் இருந்த ஐ.எஸ் தலைமைத்துவத்துடன் நேரடித் தொடர்புகளைப் பேணி வந்ததோடு, அவர்களது அங்கீகாரத்தையும் பெற்றிருந்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியில், தாக்குதலுக்குத் தேவையான தற்கொலை குண்டுகளைத் தயாரித்து, அனைத்துப் பயிற்சிகளையும் முடித்துக்கொண்டு தாக்குதலுக்குத் தயாரான ஒரு குழுவிற்கு, எந்தப் பள்ளியைத் தாக்க வேண்டும் என்று சுரேஷ் சலே தான் காட்டிக்கொடுத்தார் எனக் கூறுவது முற்றிலும் நகைப்புக்குரியது.
ஈராக் மற்றும் சிரியாவிலிருந்து ஐஎஸ் கொள்கைகளைக் கற்றுக்கொண்டு, ஒரு அமைப்பை உருவாக்கித் திட்டமிட்டவர்களுக்கு இலக்குகளைத் தீர்மானிக்கத் தெரியாது என்று கூறுவது முட்டாள்தனமானது. இன்னும் சில நாட்களில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தைக் கண்டறியத் தெரியாமல் நாள்காட்டியைப் பார்த்துக் கொடுத்தது இன்னுமொருவர் என்று கூட இவர்கள் கூறக்கூடும்.
இவ்வாறான அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளினால் சுரேஷ் சலே போன்ற அதிகாரிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே தாம் இந்தத் தகவல்களை முன்வைப்பதாக அவர் கூறியுள்ளார்.