ரணில் தீட்டும் இரகசிய திட்டம்! மகிந்த குடும்பத்துக்கு கலக்கத்தை ஏற்படுத்திய மொட்டு எம்.பிக்கள்
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி இலங்கையில் புதிய தலைவர் ஒருவரை தேர்வு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள நிலையில், நாட்டின் அரசியல் களம் விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கின்றது.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னர் அந்த வருடம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் மீதான மக்களின் எதிர்பார்ப்பு எந்த அளவு உச்சத்தில் இருந்ததோ அதற்கு சற்றும் குறையாத வகையில் இவ்வருடம் நடத்தப்படவுள்ள ஜனாதிபதி தேர்தல் மீதான மக்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்தே காணப்படுகின்றது.
ரணிலுக்கு பதவி
கோட்டாபய மற்றும் மகிந்த அரசாங்கத்தின் தோல்விகண்ட ஆட்சியை நிலை நிறுத்துவதற்கான களத்தில், ஒரே ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தின் ஊடாக வந்த ரணில் விக்ரமசிங்க ஆட்சேபனைகள் ஏதும் இன்றி 2022இல் இறங்கினார்.
ஒரே ஒரு தேசியப் பட்டியல் ஆசனம்... நாடாளுமன்ற உறுப்பினர், அடுத்து பிரதமர், இரண்டே மாதங்களில் நாட்டின் தலைமைப் பதவி.. ஜனாதிபதி என்னும் பெரும் அங்கீகாரம் ரணிலுக்கு கிடைத்தது. அதற்கு முன்னரெல்லாம், ரணிலை வசை பாடிய, தூற்றிய, கிண்டலடித்த மொட்டுவின் மைந்தர்கள் அந்த ஒரு தேசிய பட்டியல் ஆசனம் கொடுத்த பதவிக்கு தெரிந்தோ தெரியாமலோ அடி பணிய நேரிட்டது.
இதில் பெரும் பங்கு காலி முகத்திடல் போராட்டக்காரர்களைச் சாரும்....
கோட்டாபய மற்றும் மகிந்த மீதான விரக்தி
குறிப்பாக, 2015ஆம் ஆண்டு தேர்தலில் மைத்திரியிடம், மகிந்த தோற்றுப் போன போது மிக நேர்த்தியான வியூகங்களை வகுத்து, பொஜன பெரமுன என்ற ஒரு கட்சியை அமைத்து அடுத்தடுத்து மூன்று தேர்தல்களை வெற்றிகொண்டது மகிந்த அணி. இடையில் நடந்த பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் சதித் திட்டங்களும் இந்த வெற்றிக்கு பேருதவி புரிந்தமையையும் மறுக்க முடியாதுதான்.
ஆனால், மிகப்பெரிய பிம்பத்தை காட்டி ஆட்சி அமைத்த கோட்டாபய - மகிந்த அரசாங்கம் இடையில் சறுக்கியதும், அரச நிர்வாகத்தில் தேர்ச்சி பெற்ற கோட்டாபய அரசியலில் பிழைத்ததும் ரணிலுக்கு அடித்த ஜெக்பொட் பரிசு..
பொருளாதார நெருக்கடி கழுத்தை நெரிக்க, வரிசை யுகம் அச்சுறுத்த, விரக்தியின் உச்சத்தில் இருந்த பொதுமக்கள் ஆட்சி பீடத்தில் இருந்த மகிந்த மற்றும் கோட்டாபயவை தூக்கி எறிந்து விரட்டிய நிலையில், விரும்பியோ விரும்பாமலோ தங்களது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்ளவேனும் ரணிலுக்கு தமது ஆதரவை வழங்க வேண்டிய நிலைக்கு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் தள்ளப்பட்டனர்.
தேர்தல் களத்தில் பலர்
இந்தநிலையில், கடந்த இரண்டு வருடங்களில் ஓரளவு பொதுமக்களால் உணரக் கூடிய பொருளாதார ரீதியான தீர்வுகளை ரணிலின் ஆட்சியின் மூலம் பெற்றுக் கொள்ள முடிந்தது. இந்த சந்தர்ப்பத்தில், இவ்வருடம் புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்ய வேண்டிய அடுத்த தேர்தலுக்கு இலங்கை முகம்கொடுக்கின்றது.
இப்போதுவரை 10இற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களமிறங்குவதாக பகிரங்க அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, சரத் பொன்சேகா, விஜயதாச ராஜபக்ச உள்ளிட்ட ஏராளமானோர் களம் காணவுள்ள நிலையில், மகிந்த தரப்பின் முடிவு என்னவாக இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு சகலரிடத்திலும் இருந்தது.
வெளிப்படையாகவே, மகிந்த குடும்பத்தினரின் வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆதரவு தர மாட்டார்கள் என்ற விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், புதிதாக ஒரு வேட்பாளர் களமிறக்கப்படுவாரா, அல்லது ரணிலுக்கு மகிந்த தரப்பு தனது ஆதரவு கரங்களை நீட்டுமா என்ற கேள்வி பலரிடத்திலும் இருந்தது.
மொட்டு யாருக்கு ஆதரவு
இந்தநிலையில், தாங்கள் ரணிலுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என்றும், தமது கட்சியில் இருந்து வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டு அவருக்கு ஆதரவு வழங்கப் போவதாகவும் நேற்றையதினம் பொதுஜன பெரமுன அறிவித்துவிட்டது. இது கட்சியின் தீர்மானம் என்பதால் இதனை மீறிச் செயற்படுபவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுஜன பெரமுனவின் தலைமைப் பீடம் ஒரு குண்டைத் தூக்கி போட்டுள்ளது.
ஆனால், ஒழுக்காற்று நடவடிக்கைகள் எல்லாம் சர்வ சாதாரணமாக மாறிவிட்ட சமகால அரசியல் கலாசாரத்தில் பொதுஜன பெரமுனவில் இருந்து ரணில் பக்கம் எத்தனை பேர் தாவ போகின்றனர் என்பதுதான் அடுத்த வாதம்..
ரணிலின் அமைச்சரவைக்குள் இருக்கும், ஒரு சில பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் ஏற்கனவே தாங்கள் ரணிலுக்குத் தான் ஆதரவு வழங்கப் போவதாக பகிரங்கமாகவே அறிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக 2022ஆம் ஆண்டு நடந்த போராட்டங்களின் போது, நடந்த வன்முறைகளில் தங்களது வீடு மற்றும் உடமைகளை இழந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மீண்டும் மீண்டும் தங்களது ஆதரவை ரணிலிடம் உறுதிப்படுத்தி வருகின்றனர்..... பாதிப்பு அதிகம் போல!!
பிளவினை ஏற்றுக் கொள்ளும் நாமல்
ஆனாலும், ரணில் மீதான தமது விமர்சனங்களை பகிரங்கமாக வெளியிடவும் பலர் தயங்கவில்லை. குறிப்பாக நாமல் ராஜபக்ச, கடந்த இக்கட்டான நேரத்தில் நாங்கள் ரணிலுக்கு ஆதரவு வழங்கினோம் என்றும், ஆனால் அவர் மொட்டுக்குள் பிளவை ஏற்படுத்தி விட்டார் என்றும் தொடர்ந்து கூறி வரும் நிலையில், மொட்டுக்குள் பிளவு ஏற்பட்டு விட்டது என்பதையும், ரணில் பக்கம் பலர் சென்றுவிட்டனர் என்பதையும் மறைமுகமாக ஒப்புக் கொண்டு வருகின்றார்.
இவ்வாறு இலங்கை அரசியல் பரப்பு குழம்பிய குட்டையாக இருக்க, பொதுஜன பெரமுனவுக்குள் இருந்து தனக்கு தேவையான ஆதரவைப் பெற்றுக் கொள்ள ரணில் அடுத்தகட்ட நகர்வை ஆரம்பித்து விட்டதாக செய்திகள் வெளிவருகின்றன.
குறிப்பாக, பொதுஜன பெரமுனவுக்குள் தற்போது இருக்கும் 75இற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை தன்பக்கம் ஈர்க்கும் முயற்சியில் ரணில் தீவிரமாக இருப்பதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
முடிவு என்ன..??
ஏற்கனவே, தற்போதைய ரணிலின் அரசியல் மேடைகளில் பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் பலரை வெளிப்படையாக காண முடிவதுடன், ரணிலின் தரப்பு விசாலமடைவதையும் காண முடிகின்றது. அந்த வகையில் தனது பட்டாளங்களை மேலும் விஸ்தரிக்க முடிவு செய்துள்ள ரணில், மொட்டுவின் விசுவாசிகள் பலரை கவர்ந்திழுக்க முடிவு செய்துள்ளார்.
இந்த பணியை முடிப்பதற்கு மொட்டுவுக்குள் இருக்கும் தனது ஆதரவாளர்களிடமே பொறுப்பை ஒப்படைத்திருப்பதாகவும், அதில் மகிந்தானந்த அளுத்கமகே, பிரமித்த பண்டார தென்னக்கோன், கஞ்சன விஜேசேகர உள்ளிட்டோர் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எது எவ்வாறிருப்பினும், ரணிலின் ஆதரவு பட்டாளம் பெருகிக்கொண்டே செல்கின்றது. ஆனால்.. முடிவு நேர்மாறானதாகவும் இருக்கலாம். அதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |