தென்னாப்பிரிக்காவில் தீவிரமடையும் பெண்கள் படுகொலை அச்சுறுத்தல் - 11 ஆவது பெண்ணின் சடலம் மீட்பு
தென்னாப்பிரிக்காவின் வணிகத் தலைநகரான ஜோகன்னஸ்பேர்க்கிற்கு கிழக்கே மேலும் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து அப்பகுதியில் இதுவரை மீட்கப்பட்ட பெண்களின் சடலங்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய தினம்(28) உள்ளூர் நேரப்படி நண்பகல் வேளையில் எகுர்ஹுலேனி நகராட்சிக்குட்பட்ட திறந்தவெளிப் பகுதியொன்றில் பாதுகாப்பு நிறுவன வாகனம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இந்தச் சடலம் கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
இறப்புக்கான காரணம்
இறந்துபோன பெண்ணின் அடையாளம், வயது அல்லது இறப்பிற்கான காரணம் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.
இதற்கு முதல் நாள் சனிக்கிழமையன்று, அதே நகராட்சியில் அமைந்துள்ள மயானத்திற்கு அருகில் அரைகுறை ஆடையுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது.

அவர் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார், இந்த கொலையுடன் தொடர்புடைய நபரொருவரை சுமார் 400 கிலோமீற்றர் தொலைவில் வைத்து கைது செய்துள்ளனர்.
இதனுடன், தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.
நாளொன்றுக்கு 15 பெண்கள் வரை உயிரிழப்பு
உலகிலேயே பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் படுகொலைகள் அதிகளவில் இடம்பெறும் நாடுகளில் ஒன்றாகத் தென்னாப்பிரிக்கா காணப்படுகின்றது.

அங்கு சராசரியாக நாளொன்றுக்கு 15 பெண்கள் வரை கொல்லப்படுகின்றனர். இந்த நிலைமை குறித்து கவலை வெளியிட்டுள்ள ஜனாதிபதி சிறில் ரமபோசா, தமது நாட்டில் பெண்கள் தொடர்ச்சியாகக் கொல்லப்படுவது மிகவும் வருத்தமளிப்பதாகவும், ஆண்கள் தலைகுனிய வேண்டிய விடயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மீட்கப்பட்ட சடலங்களில் சில ஒரே நபராலோ அல்லது குழுவாலோ கொல்லப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகின்ற போதிலும், இது தனித்தனியான சம்பவங்களா அல்லது தொடர் கொலையாளியின் செயலா என்பது குறித்து தென்னாப்பிரிக்க பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.