முல்லைத்தீவில்அழகிழந்து கிடக்கும் கரைத்துறைப்பற்று வீதி
முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்கு செல்லும் வழிகளில் ஒன்று அழகிழந்து கிடப்பதாக ஆர்வலர்கள் கவலையினை வெளியிட்டு வருகின்றனர்.
பெயர்ப்பலகையோடு அதன் அருகில் ஒரு வழிபாட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.அது சீலையினால் கூரை அமைக்கப்பட்டு பார்ப்போருக்கு கம்பீரமற்ற மற்றும் நேர்த்தியற்றதாக தோன்றுவதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
பலரும் வந்து செல்லும் ஒரு அரச அலுவலகத்தின் பெயர்ப்பலகையோடு இருக்கும் இந்த வழிபாட்டிம் நேர்த்தியோடு அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுதல் வரவேற்கத்தக்கது.
மூன்று வழிகளில் ஒன்று
கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்கு செல்வதற்கான மூன்று பிரதன வழிகள் உண்டு.
மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் இருந்து ஆரம்பமாகும் பாதை ஒன்று.முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியில் இருந்து இரண்டு பாதைகள் என மூன்று பாதைகளின் ஊடாக செயலகத்தினை சென்றடைய முடியும்.
முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் அமைந்துள்ள இந்த பாதை அண்மைக் காலத்திலேயே புனரமைக்கப்பட்டிருந்தது.
பாதை வழியில் பயணிப்போருக்கு மிடுக்கான எண்ணங்களை தோற்றுவிப்பவை அப் பாதைவழியே அமையும் குறிகாட்டிகளும் கட்டுமானங்களும் ஆகும்.
ஏனைய இரு பாதைகளும் கொங்கிறீற்று இடப்பட்டுள்ளதுடன் இந்த மூன்றாவது பாதை கிரவல் போடப்பட்டு செப்பனிட்டிருக்கிறது.
நல்ல முயற்சி
பாதையின் அமைவில் முச்சந்தியை பேணுகின்றது.திரும்பலில் "V" வடிவத்தை பேணி அமைக்கப்பட்டுள்ள இந்த பாதையில் V இன் மையத்தில் பெயர்ப்பலகையும் வழிபாட்டிடமும் அமைக்கப்பட்டுள்ளது.
V அமைப்பின் முனையில் வேப்பமரம் ஒன்றும் இருந்துள்ளது.எனினும் இப்போது அது பட்டமரமாக காட்சியளிக்கின்றது.
வழிபாட்டிடத்தோடு நித்தியகலியாணி பூமரம் ஒன்றும் நட்டு வளர்க்கப்பட்டிருப்பதனை அவதானிக்கலாம்.
நல்ல சிந்தனையுடன் கவர்ச்சிகரமான தோற்றத்தினை ஏற்படுத்த முயன்றிருக்கின்றார்கள் இதன் திடடமிடலாளர்கள்.
தொடர்ச்சியான பராமரிப்பின்மையாலேயே நேர்த்தியான கட்டமைப்பினை பேண முடியவில்லை என அந்த சூழலினை அவதானிப்பதன் மூலம் புரிந்து கொள்ள முடிவதாக சமூகவிடய ஆய்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டுகின்றார்.
பொருத்தமான முன்னெடுப்புக்கள் வேண்டும்
முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் அமைந்துள்ள கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்கு செல்லும் பாதைக்கு எதிர்ப்புறம் முல்லைத்தீவு பறவைகள் தங்ககம் ஒன்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
புலம் பெயர்ந்து வரும் பறவைகள் போகத்தில் வந்து தங்கிச் செல்லும் நீர்நிலையொன்றாக அது இருக்கின்றது.
அருகில் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் செஞ்சிலுவைச் சங்க அலுவலகம் என்பனவும் இருக்கின்றன.
தொழில்நுட்ப கல்லூரிக்கு வந்து செல்லும் மாணவர்கள் மற்றும் பிரதேச செயலகத்திற்கு வந்து செல்லும் மக்கள் அவர்களில் உள்ள இளையவர்கள் என இளம் சமூகத்தினை கருத்திலெடுக்கும் போது நேர்த்தியான கட்டமைப்புக்களை பேணுவதன் அவசியம் உணரப்பட்ட வேண்டும்.
நேர்த்தியான கட்டமைப்புக்களை பேணுவதன் மூலம் எடுப்பான எழுச்சிமிக்க சிந்தனைகளை இளையவர் மனங்களில் ஏற்படுத்திவிட முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
வழிபாட்டிடத்தினை உரிய முறையில் சிறப்பான கட்டமைப்பு தோற்றத்தினை ஏற்படுத்துவதில் கவனமெடுக்க வேண்டும். முல்லைத்தீவில் வாழும் முதுசங்கள் பலரிடமும் இதே கருத்துக்களை அவதானிக்க முடிகின்றது.
நிர்வகிக்கும் இடங்களிலும் கருத்திலெடுக்கலாம்
கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தினால் பல பொது மக்கள் கூடும் இடங்கள் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
அங்கயற்கண்ணி அன்னக்குடில் போன்ற இடங்களைக் குறிப்பிடலாம்.
அங்கெல்லாம் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டிருந்த அதே எண்ணக்கருவோடு தொடர்ந்து பயணிப்பதில் தொய்வு ஏற்படாது இருப்பதனையும் கருத்திலெடுப்பதானது ஆரோக்கியமான சூழலைக் தரும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பொது மக்கள் கூடும் இடங்களில் ஏற்படும் பொருத்தமான எடுப்பான கட்டமைப்புக்களை நேர்த்தியாக பேணும் போது நல்ல எண்ணக்கருக்களை மக்கள் மனங்களில் விதைக்க முடியும்.அதனால் அவர்களது வாழிடங்களிலும் அத்தகைய மாற்றங்களை எதிர்பார்க்க முடியும்.
பொருத்தமான மாற்றங்களை உரிய தரப்பினர் கவனமெடுத்து செய்வார்களானால் மகிழ்ச்சியே!
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |