சமர்ப்பிக்கப்படவுள்ளது தேசிய மின்சக்தி கொள்கை மற்றும் தேசிய மின் கட்டணக் கொள்கை தொடர்பான அமைச்சரவை பத்திரம்
தேசிய மின்சக்தி கொள்கை மற்றும் தேசிய மின் கட்டணக் கொள்கை தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் நாளைய தினம் (09) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் திட்டம் 5 கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அதில் 04 கட்டங்கள் தற்போது வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய, அடிப்படை கைமாற்றல் திட்டம், வருடாந்த மின் கொள்முதல் திட்டம், நீண்டகால மின்னுற்பத்தித் திட்டம் மற்றும் நீண்டகால மின் பரிமாற்ற அபிவிருத்தித் திட்டம் ஆகிய கட்டங்கள் இவ்வாறு நிறைவு செய்யப்பட்டுள்ளதாக மின்சார சபை மறுசீரமைப்புச் செயலணியின் தலைவர் புபுது நிரோஷன் அண்மையில் தெரிவித்தார்.
அமைச்சரவைப் பத்திரம்
எவ்வாறாயினும், இதன் இறுதிக் கட்டமான தேசிய மின்சக்தி கொள்கை மற்றும் தேசிய மின் கட்டணக் கொள்கையைத் தயாரிக்கும் பணிகள் இடம்பெற்று வந்த நிலையில், அது நாளைய தினம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த அமைச்சரவைப் பத்திரம் அங்கீகரிக்கப்பட்ட பின்னர், மின்சாரசபையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அமைச்சர் வெளியிடவுள்ளார்.
குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதன் பின்னர், 1969 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மின்சாரச் சட்டம் இரத்துச் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |